வரைக்காட்சிப் படலம் - 918
கட்டை யறுத்துச் சென்ற குதிரைகள்
918.
மும்மை புரி வன் கயிறு
கொய்து. செயல் மொய்ம்பால்
தம்மையும் உணர்ந்து. தரை
கண்டு. விரைகின்ற.
அம்மையினொடு இம்மையை
அறிந்து நெறி செல்லும்
செம்யைவர் என்ன. நனி
சென்றன - துரங்கம்.
மும்மை புரி - மூவகையாக (மண். பொன். பெண் ஆசைகள்)
அமைந்த; வல்கயிறு - வலிய பிணிப்புக்களை; கொய்து - அறுத்து;
செயல் மொய்ம்பால் - (தாம்) செய்யும் யோகத்தின் வலிமையால்;
தம்மை உணர்ந்து - தமது ஆன்மாவின் உண்மை நிலை (ஆன்மா
மலம் அற்றது; ஞான ஆனந்த மயமானது; கடவுளுக்கு
அடிமையானது) தெரிந்து; தரை கண்டு- (அதனோடு நில்லாமல்) தாம்
அடைய வேண்டிய பரம் பொருளின் நிலையையும் உணர்ந்து;
விரைகின்ற - (அதனை அடையுமாறு) விரைந்து செல்லுகின்ற;
இம்மையை அம்மையினொடு அறிந்து - இவ் உலகப் பயனை
மறுமைப் பயனோடு உணர்ந்து; நெறி செல்லும் - நன்னெறியே
செல்லுகின்ற; செம்மையவர் என்ன - நற்குணமுடைய யோகியரைப்
போல; துரங்கம் - குதிரைகள்; மும்மை புரி வன் கயிறு - (தம்மை
கட்டிய) முப்புரியாக அமைந்த வலிய கயிற்றை; கொய்து - அறுத்துக்
கொண்டு; செயல் மொய்ம்பால் - (பாகனது) செயல் வல்லமையால்;
தம்மையும் உணர்ந்து - தாம் செய்ய வேண்டியன இன்னவை என்று
அறிந்து; தரை கண்டு - நிலத்தின் இயல்பு அறிந்து; விரைகின்ற -
விரைவாகச் செல்லுகின்றனவாகி; நனி சென்றன - மிக ஒழுங்காக
வந்தன.
ஞான யோகியர் பரகதி அடைதற்குரிய நெறியில் விரைந்து செல்லும்
முறை போன்று இருந்தது குதிரைகளின் ஒழுங்கான செலவு என்பது.
உத்த ஆன்மா அறிவதற்குரிய ஐவகை நிலைகளாவன 1. வினைத்
தடையாகிய விரோதி நிலை; 2. அத்தடையை நீக்கும் உபாய நிலை; 3.
அந்த உபாயத்தை மேற்கொள்ளும் ஆன்ம நிலை; 4. அது நாடும்
பரமான்ம நிலை; 5. வீடுபேறு. இவற்றையே ‘அர்த்த பஞ்சகம்’ என்பர்.
தரை கண்டு: பரம்பொருள் தங்கும் தானம். மும்மை புரி வன்கயிறு:
முப்புரியாக அமைந்த திண்ணிய கயிறு; ஆணவம். கன்மம். மாயை
என்ற மும்மலங்கள் - சிலேடை. சிலேடை மூலமாக வந்த
உவமையணி. 21
