வரைக்காட்சிப் படலம் - 920

bookmark

ஆற்றில் ஊற்றுநீர் தோன்றுதல்

ஆறு உதவும் ஊற்று நீர்
 
920.

வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்.
கிள்ள எழுகின்ற புனல். கேளிரின் விரும்பி.-
தெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற;
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த.
 
தெள்ளு  புனல் ஆறு - தெளிந்த நீருள்ள நதிகள்; வெள்ள நெடு
வாரி - (தம்மிடத்து)  வெள்ளமாகிய மிகுந்த நீர்ப் பெருக்கை; அற வீசி
உளவேனும்  -  முற்றிலும்   வீசிக்  கொண்டிராமல் போயினும்; கிள்ள
எழுகின்ற  புனல்  -  தோண்டத்  தோண்ட ஊறுகின்ற நீரை; சிறிதே
உதவுகின்ற  -  சிறிது   சிறிதாக உதவுவனவாயின (அதனால் அவை) ;
உள்ளது  - (செல்வம்  இருந்த  காலத்தில் வேண்டியவர்க்குக் கொடுத்து
அச்  செல்வம்  வறண்ட   காலத்தும்)  தன்னிடம்  உள்ள  பொருளை;
மறாது -(இல்லையென்று) மறுத்துச் சொல்லாமல்; கேளிரின் விரும்பி -
உறவினரைப்  போல   விருப்பம் கொண்டு;  உதவும் - (அவர்களுக்கு)
கொடுக்கும்   தன்மையுள்ள;    வள்ளலையும்  -  இரக்க  குணமுள்ள
வள்ளல்களையும்; ஒத்த - ஒத்திருந்தன. 

நதிகள்     தம்மிடம்  வெள்ள  நீர்  இருந்த காலத்தில் பலருக்கும்
வேண்டியவாறு  உதவி.  அந்த  நீர்   வற்றிய   காலத்தும்  தோண்டத்
தோண்ட  மெல்ல மெல்ல ஊற்று நீரை  உதவுகின்றன.  வள்ளல்களுக்கு
இந் நதிகள் உவமையாகும். வள்ளலையும் - ‘உம்’ இசைநிறை.       23