வரைக்காட்சிப் படலம் - 928

bookmark

கவிக்கூற்று

928.

சுற்றிய கடல்கள் எல்லாம்
   சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன.
   பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர். தேவிமார்கள்.
   மைந்தர்கள். கொம்பனார். வந்து
உற்றவர். காணலுற்ற
   மலை நிலை உரைத்தும் அன்றே!
 
சுற்றிய  கடல்கள்  எல்லாம்  - (உலகத்தை) சூழ்ந்துள்ள கடல்கள்
யாவும்;  சுடர்  மணிக்  கனகக்  குன்றை  -  ஒளிவிடும் மணிகளைக்
கொண்ட  மேருமலையை;  பற்றிய  -  கவர்ந்து கொள்ளும் பொருட்டு;
வளைந்த  என்ன  -  வளைத்துக்  கொண்டன  என்று  சொல்லும்படி;
சேனை  பரந்து வந்து - (அம் மலை இடங்களில்) அந்தச்  சேனைகள்
பரவி   வந்து;   இறுத்த -  தங்கின;  கொற்றவர்  தேவிமார்கள்  -
அரசர்களும்   அவ்வரசரின்   மனைவியரும்;  மைந்தர்கள்  கொம்பு
அனார்  -  அரசிளங்குமரரும்   பூங்  கொம்பு போன்ற இளவரசியரும்
ஆகிய;  வந்து  உற்றவர் - (அங்கு) வந்து சேர்ந்தவர்கள்; காணலுற்ற
மலை   -  காண்பதற்கு   அமைந்த  அச்  சந்திரசயிலத்தின்;  நிலை
உரைத்தும் - தன்மையை இனிச் சொல்லுவோம்.

மலையைச்     சுற்றிய   அடிவாரங்களில்  சேனை  தங்கியது மேரு
மலையைக்   கவருமாறு   நாற்கடல்களும்   வளைத்துள்ளன   போலும்
என்றார் - தற்குறிப்பேற்ற உவமையணி.                          1