வரைக்காட்சிப் படலம் - 929
சந்திரசைலத்தின் வருணனை ((929-942))
929.
பம்பு தேன் மிஞிறு தும்பி
பரந்து இசை பாடி ஆட.
உம்பர் வானகத்து நின்ற
ஒளி வளர் தருவின் ஓங்கும்
கொம்புகள். பனைக் கை நீட்டி.
குழையொடும் ஒடித்து. கோட்டுத்
தும்பிகள். உயிரே அன்ன
துணை மடப் பிடிக்கு நல்கும்.
கோட்டுத் தும்பிகள் - தந்தங்களையுடைய ஆண் யானைகள்;
பம்புதேன் மிஞிறு தும்பி - நெருங்கிய தேனில் மொய்க்கின்ற
மிஞிறுகளும். தும்பிகளும்; பரந்து இசைபாடி - பரவிப் பண்களைப்
பாடிக்கொண்டு; ஆடும் உம்பர் வானகத்து - ஆடுதற்கு இடனான
மேலிடமாகிய வானுலகத்திலே; நின்ற ஒளிதரு தருவின் - உள்ள
ஒளிவிடும் கற்பகத் தருவினுடைய; ஓங்கும் கொம்புகள் - உயர்ந்த
கிளைகளை; பனைக் கை நீட்டி - (தம்) பனைமரம் போன்ற கைகளை
நீட்டி; குழையொடும் ஒடித்து - தளிர்களோடும் முறித்து; உயிரே
அன்ன - (தம்) உயிரையொத்த; துணை மடப்பிடிக்கு -
மடப்பத்தையுடைய பெண் யானைக்கு; நல்கும் - கொடுக்கும்.
மிஞிறு. தும்பி: வண்டின் இனங்கள். மிஞிறு: வரி வண்டு. தும்பி:
கருவண்டு. ஆண்யானை கற்பகத் தருவின் கிளைகளைத் தமது
மடப்பிடிக்குக்கொடுக்குமென்றது - தொடர்புயர்வு நவிற்சியணி. ‘இம்
மலை மிக ஓங்கியுள்ளது. இங்கு இருந்தபடியே சொர்க்கத்தை
அணுகலாம் என்பது பெறப்படும். 2
