வாழ்க திலகன் நாமம்!

வாழ்க திலகன் நாமம்!

bookmark

பல்லவி

வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

சரணங்கள்

நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
  நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
  எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க)    1

கல்வி யென்னும் வலிமை கொண்ட
  கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
  அகழி வெட்டினான்
சொல் விளக்க மென்ற தனிடைக்
  கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக்
  கொடியைத் தூக்கினான் (வாழ்க)    2

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
  தோணி யவன் பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
  சூழ்ச்சி யவன் பெயர்
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
  புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர். (வாழ்க)    3