அசலாம்பிகை அம்மையார்

அசலாம்பிகை அம்மையார்

bookmark

வாழ்க்கை வரலாறு திண்டிவனத்திற்கு அருகிலுள்ள இரட்டணை என்னும் ஊரில் 1875 ஆம் ஆண்டு தோன்றியவர் அசலாம்பிகை அம்மையார். பெருமாள் ஐயர் இவரின் தந்தை ஆவார்.  பத்து வயது நிரம்பிய போதே அசலாம்பிகைக்குத் திருமணம் செய்விக்கப்பட்டது.  சிறு வயதிலேயே தன்னுடைய கணவனை இழந்து விதவை ஆனார்.   தன்னுடைய தந்தையின் உந்துதலால் கல்வி கற்கத் துணிந்தார்.  அக்காலத்தில் கல்வி கற்க பெண்கள் முன்வருவது கிடையாது.  இதனால் தந்தையார் ஆசிரியர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து தன் மகளுக்குக் கற்பித்தார்.  முறையாக அனைத்து இலக்கிய இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தார் அசலாம்பிகை அம்மையார். தன்னுடைய வாழ்நாளில் பாதியைத் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்படுகின்ற கடலூரில் கழித்தார்.  பின்னர் சில காலம் வடலூரில் தங்கி இராமலிங்க அடிகளாரைப் பற்றி எழுதத் தொடங்கினார்.  இராமலிங்க சுவாமிகள் பதிகம் என்னும் நூலை இயற்றி ஆன்மீக உலகத்திற்கு வழங்கினார்.  குழந்த சுவாமி பதிகம் என்னும் நூலையும் பின்னாளில் இயற்றினார். தேசியத்தில் தன்னை அதிகம் இணைத்துக்கொள்ள விரும்பிய அம்பிகை விடுதலைப் போராட்ட தலைவர்களின் கொள்கைகளைப் பெரிதும் பின்பற்றினார்.  விடுதலை வேட்கையை மக்களிடம் தன்னுடையப் பாடல்கள் மூலம் தெரிவித்து ஏற்ற விடுதலை எழுச்சியை ஊட்டினார். தான் இல்லத்தில் கல்வி கற்றது போலவே தன்னைக் காண வரும் பெண்டிருக்கும் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்.  அவ்வாறு கற்பிக்கும் போது சிலபல பாடல்களை எழுதி அப்பெண்களிடம் கொடுப்பார்.  அப்படிக் கொடுத்த அப்பாடல்கள் அனைத்தும் விடுதலைக் கனலை எழுப்பும் முகமாய் இருந்தது. அம்பிகையின் பாடல்கள் இதழ்களில் இடம்பெறத் தொடங்கியது.  அவரின் ஆற்றல் கண்டு பலரும் வியந்தனர்.  நாட்டுப்பற்று மிக்க இவர் காந்திபுராணம், திலகர் புராணம் என்னும் இரு நூல்களை ஆக்கினார்.  காந்திபுராணத்தில் காந்திமகானின் உணர்வை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார் .  இவ்வுலகில் துயர் களைந்து நன்மை நடக்க வேண்டுமெனில் அறச்செயல் ஓங்க வேண்டும்.  கலிகாலத்தில் தீமையே எங்கும் ஓங்கி நிற்கும் இருப்பினும் அதனைக் களைய அரும்பாடுபட வேண்டும் என்றும் இதற்காக அவதரித்தவர் தான் மகாத்மா காந்தி என்றும் அவரை இந்நாட்டிற்குத் தந்த பாரதத் தாயின் காலில் விழுந்து வணங்குதல் வேண்டும் என்றும் கூறுகின்றார். திரு.வி.க அவர்கள் அம்மையின் அரும்பணியை அறிந்து இக்கால ஔவையார் என்று புகழ்ந்தார்.