குலமுறை கிளத்து படலம் - 747
தாடகை மக்களின் மறைவு
747.
‘செக்கர் நிறத்து எரி குஞ்சிக்
சிரக் குவைகள் பொருப்பு என்ன
உக்கவோ முடிவு இல்லை;
ஓர் அம்பினொடும். அரக்கி
மக்களில். அங்கு ஒருவன் போய்
வான் புக்கான்; மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன்;
போந்தனென். என் வினை முடித்தே.
செக்கர் நிறத்து- செவ்வானம் போன்ற நிறம் கொண்ட; எரி குஞ்சி
- நெருப்புப் போல மயிர்களையுடைய; சிரம் குவைகள்
- (எனது வேள்விக்கு இடையூறு செய்த அரக்கர்களின்) தலைகளின்
குவியல்; பொருப்பு என்ன - மலைகளைப் போல; உக்கனவோ-
அறுபட்டு விழுந்து கீழே சிதறியவற்றிற்கோ; முடிவு இல்லை - ஓர்
அளவே இல்லை; அங்கு- அப்போது; (அந்த இடத்தில்); அரக்கி
மக்களில் ஒருவன் - அத் தாடகையின் மைந்தர் இருவருள்
ஒருவனான சுபாகு; ஓர் அம்பினொடும் - (இராமன் எறிந்த) அம்பு
தைத்த மாத்திரத்தில்; போய் வான் புக்கான் - உயிர் நீத்து வானுலகம்
சேர்ந்தான்; மற்றையவன் - மற்றொரு மைந்தனான மாரீசன்; புக்க
இடம் - (இவன் எய்த அம்பால்) போய் விழுந்த இடத்தை;
அறிந்திலேன் - யான் அறியவில்லை (இவ்வாறு இடையூறு அகப்பட்ட
பின்பு); என் வினை முடித்து - என் வேள்வியை நிறைவாகச் செய்து
முடித்து; போந்தனென் - (இங்கே) வந்தேன்.
பொருப்பு: இந்திரனால் சிறகு அரியப்பட்டு மண்ணில் விழுந்த
மலைகள். 27
