எழுச்சிப் படலம் - 895

bookmark

புழுதியால் விண்ணும் மண்ணுலகாயிற்று எனல்

895. 

நோக்கிய திசைகள் எல்லாம்
   தன்னையே நோக்கிச் செல்ல.
வீக்கிய கழற் கால் வேந்தர்
   விரிந்த கைம் மலர்கள் கூப்ப.
தாக்கிய களிறும் தேரும்
   புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி. விண்ணும்
   மண்ணுலகு ஆக்க. - போனான்.
 

நோக்கிய  திசைகள்  எல்லாம்  - பார்க்கின்ற திக்குகள் யாவும்;
தன்னையே நோக்கிச் செல்லும் - (அரசனது பார்வை எப்போது தன்
மீது  பதியும்   என்ற  கருத்துடன்)  தன்னையே  பார்த்துக்  கொண்டு
செல்லும்;   கழல்   வீக்கிய கால்வேந்தர்   -   காலில்  வீரக்கழல்
அணிந்துள்ள  அரசர்கள்;  விரிந்த  கை மலர்கள் கூப்ப - மலர்ந்த
தாமரை   போன்ற   தம்  கைகள்  கூப்பவும்;  தாக்கிய  களிறும் -
(ஒன்றோடு  ஒன்று) மோதிக் கொண்டு செல்லும் யானைகளும்; தேரும்
புரவியும்   -   தேர்களும்   குதிரைகளும்;   படைஞர்  தாளும் -
காலாட்படைகளின் பாதங்களும்; ஆக்கிய - மேலே எழுப்பிய; தூளி -
புழுதிகள்;  விண்ணும்   -   வானத்தையும்; மண்ணுலகு  ஆக்க  -
மண்ணுலகமாக்கவும்; போனான் - சென்றான்.

தசரத  மன்னவனின் பார்வை விழும்போது  எல்லாம்  அவனையே
காண்கின்ற மன்னவரின் கைகள் குவிகின்றன என்பது.             79