குலமுறை கிளத்து படலம் - 743
புதல்வர்களின் வளர்ச்சி
குமரர்கள் கல்வி கற்ற வரலாறு
743.
‘தலை ஆய பேர் உணர்வின்
கலைமகட்குத் தலைவர் ஆய்.
சிலை ஆயும் தனு வேதம்
தெவ்வரைப்போல் பணி செய்ய.
கலை ஆழிக் கதிர்த் திங்கள்
உதயத்தில் கலித்து ஓங்கும்
அலை ஆழி என வளர்ந்தார் -
மறை நான்கும் அனையார்கள்.
மறை நான்கும் அனையார்கள்- நான்கு வேதங்களையும்
ஒத்துள்ள அந்தக் குமாரர் நால்வரும்; தலையாய - முதன்மையான;
பேருணர்வின் - செய்திகளையெல்லாம் அறியக் கூடிய முதிர்ந்த
அறிவில்; கலை மகட்குத் தலைவராய் - கலைமகளுக்கும்
மேம்பட்டவராய்; சிலை ஆயும் - வில் திறத்தை ஆராய்ந்து
கூறுவதான; தனுவேதம் - தனுர் வேதமானது; தெவ்வரைப் போல்
பணி செய்ய - (தம்முடைய) பகைவர் (தோற்றுத் தம்மிடம் குற்றேவல்
செய்வது) போலத் தமக்குக் குற்றேவல் செய்யுமாறு; கலை ஆழிக்
கதிர்த் திங்கள் - கலைகள் நிறைந்த வட்டவடிவமான ஒளியையுடைய
முழு நிலவின்; உதயத்தில் கலித்து- உதய காலத்தில் ஒலித்து; ஓங்கும்
- பொங்குகின்ற; அலை ஆழியென - அலைகளையுடைய கடல்கள்
போல; வளர்ந்தார் - வளர்ந்து வந்தார்கள்.
மறை நான்கும் அனையார்கள் - அறம் முதலான நாற்பொருட்
பயன்களையும் அளிக்கும் தன்மையர் எனலாம். தம் ஆசிரியர்
முன்னிலையில் தம் அறிவாகிய அலைகள் பொங்கிக் காணக் கலைப்
பயிற்சி பெற்று அக்குமாரர் வளர்ந்தனர் என்பதைத் திங்கள்
உதயத்தில் கலித்தோங்கும் அலையாழி என்னும் தொடரால்
குறித்தார். 23
