சிவக்கரந்தை
தாவர இயல் பெயர்: Sphoeranthus Zeylanicus Nob/ Sphoeranthus Amaranthoides
இதன் மறு பெயர்கள்: கரந்தை
வளரும் இடங்கள்: இந்தியா மற்றும் ஆசியாவின் உஷ்ண பிரதேச நாடுகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கிறது.
பயன் தரும் பகுதிகள்: தண்டு, இலை, பூ, வேர், விதை என அனைத்துமே பயன் தரும்.
பொதுவான தகவல்கள் : மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச் செடி. நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையால் வமனம், அருசி, விந்து நட்டம், க்ஷீணவாதம், கரப்பான், வாதாதி தொந்தம், காசம், அக்கினி மந்தம் போன்ற வியாதிகளை நீக்க இயலும். அத்துடன் இந்த மூலிகையை தினம் உட்கொள்ள உடல் அழகை மேம்படுத்தும்.
சிவகரந்தை பயன்படுத்தும் முறை:-
இந்தச்செடி பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்துச் சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலயவாயைக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சூரணத்தைத் தினமும் இருவேளை காலையும் மாலையும் திரிகடி அளவு சிறிது சீனிக் கூட்டிச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால் நல்ல பசி உண்டாகும். இரத்தத்திலுள்ள மாசுகள் நீங்கி சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும். விந்து அணுவைப் பலப்படுத்தும். நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகுக் கூடும்.
மருத்துவப் பயன்கள்:
* சிவகரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது.
* சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
* சிவகரந்தை பொடி விந்து நஷ்டத்தை ஈடு கட்டி ஆண்மையை பெருக்கும்.
* சிவகரந்தை பொடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
* சிவகரந்தை பொடி சிறு நீரக நோய்களை போக்க வல்லது.
* சிவகரந்தை பொடி உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும்.
* சிவகரந்தை பொடி நல்ல பசியை உண்டு பண்ணும். அத்துடன் ரத்தத்தில் உள்ள மாசுகளை நீக்கும்.
