செண்பகராமன் பிள்ளை
வாழ்க்கை வரலாறு வீரன் செண்பகராமன் எனும் பெயரை முதல் உலக யுத்தத்தின் போது கேட்டவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்த எம்டன் எனும் ஜெர்மானிய கப்பலில் இருந்து குண்டு வீசித் தாக்கிய செய்தியில் செண்பகராமன் பிள்ளையின் பெயர் அடிபடலாயிற்று. இவரைப் பற்றிய ஒரு சில நூல்கள் வெளியாகியுள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஒரு தலைவராக இருந்த கவிஞர் வானம்பாடி அவர்கள் வீரன் செண்பகராமன் பற்றிய ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். கவிஞர் வானம்பாடி தஞ்சை காசுக்கடைத்தெருவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வானம்பாடி அச்சகம் என்ற ஒரு அச்சகம் வைத்திருந்தார். ஒரு வகையில் ம.பொ.சி. அவர்கள்தான் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், வ.உ.சிதம்பரம் பிள்ளையை கப்பலோட்டிய தமிழன் என்று அடைமொழி சேர்த்து பெருமை சேர்த்த வகையிலும், மேலும் பற்பல சுதந்திரப் போர் புரிந்த பலர் வரலாறுகளையும் வெளிக் கொண்டுவரக் காரணமாக இருந்தார். அதோடு அரசாங்கமே செய்ய வேண்டிய ஒரு வேலையையும் தனிமனிதனாக அந்த தூய கதராடைத் தியாகி செய்து முடித்தார். அதுதான் விடுதலைப் போரில் தமிழகம் எனும் இரு நூல்களாகும். இவர் வாழ்ந்த காலம் 1891 முதல் 1934 வரை. அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பகுதியில் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் சீர்மிகுந்த குடியில் பிறந்தவர். இவர் திருவனந்தபுரத்தில் வசித்த காலத்தில் அங்கு வசித்த ஒரு ஜெர்மானியர் இவருக்குப் பழக்கமானார். அவருடைய அழைப்பின் பேரில் இவர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தனது பதினேழாம் வயதில் தாய் நாட்டை விட்டுப் புறப்பட்டு ஜெர்மனிக்குச் சென்றார். அன்றைய ஜெர்மனியில் அதிபராக இருந்தவர் வில்லியம் கெய்சர் என்பவர். தன்னுடைய அறிவுத் திறனாலும், ஆற்றல்மிக்க செயல்பாடுகளாலும் அதிபர் கெய்சரை இவர் கவர்ந்தார். அங்கு சென்ற பின் இவர் பல மொழிகளைக் கற்றார்; புலமை பெற்றார்; பல பத்திரிகைகளையும் நடத்தினார். டாக்டர் பட்டமும் பெற்றார். அப்போது இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் நாட்டு சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய நேரம். இவரோ வேறு விதமாகத் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவியோடு இந்தியாவை ஆட்சி புரியும் ஆங்கிலேயர்களின் மீது போர் தொடுத்து அவர்களை விரட்டிவிட்டு இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்ய எண்ணமிட்டார். அதன் பொருட்டு இந்தியர்களைக் கொண்ட ஒரு அமைப்பை ஜெர்மனியில் அமைத்தார். அதன் பெயர் Indian National Volunteers. இவர்தான் முதன் முதலில் தாய்நாட்டை வணங்க ஜெய் ஹிந்த் எனும் கோஷத்தை உருவாக்கி முழங்கினார். இவரது அடிச்சுவட்டில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைக்கவும், இவரது ஜெய்ஹிந்த் கோஷத்தை முழக்கமிடவும் தொடங்கினார். 1914 தொடங்கி முதல் உலக மகா யுத்தம் நடைபெற்றது. உலகக் கடல் பகுதியெங்கும் ஜெர்மானியப் போர் கப்பல்கள் உலவிவந்தன. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரின் கப்பல்களை உடைத்தெறியத் தொடங்கின. அப்படிப்பட்ட கப்பல் எம்டன் எனும் பெயரில் சென்னை கடற்கரைக்கு வந்து சென்னை மீது குண்டுகளை வீசியது. இப்போதைய உயர்நீதி மன்ற வளாகத்தில்கூட ஒரு குண்டு விழுந்தது. அந்த கப்பலில் தலைமை இன்ஜினீயராக வந்தவர் செண்பகராமன் பிள்ளை. இவரைப் பற்றி கவிஞர் வானம்பாடி தனது நூலில் குறிப்பிடும் செய்தி யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் யுத்த கேந்திரத்தின் மீது விமானத்தில் பறந்து பிரிட்டிஷ் பட்டாளத்தில் இருந்த இந்திய சிப்பாய்களின் மத்தியில் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசி, பிரிட்டனுக்கு எதிராக அவர்களது துப்பாகி முனைகளைத் திருப்புமாறு கோரினார். ஜெர்மனியிடம் பிடிபட்ட ஆயிரக்கணக்கான இந்திய யுத்தக் கைதிகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார். மெஸபடோமியா யுத்த கேந்திரத்தில் போராடிய சுதேசி இராணுவத்தைக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் சப்ளைகளைத் துண்டித்து, மூன்று கடல்களிலும் முற்றுகையிட்டு உள்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் புரட்சிக்கு உதவி செய்வதன் மூலம் பிரிட்டனை செயலற்றதாக்கி, காபூலில் அமைத்த சுதந்திர அரசாங்கத்தை டில்லிக்கு மாற்றத் திட்டமிட்டிருந்தார்.இவர் ஜெர்மனியில் இருந்த காலத்தில் இவரைப் பல இந்தியத் தலைவர்கள், குறிப்பாக மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சந்தித்தனர். கெய்சர் அதிபராக இருந்த வரை வீரன் செண்பகராமன் பிள்ளைக்கு ஒரு தொல்லையுமில்லை. முதல் யுத்தத்துக்குப் பிறகு அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக ஆனபின்பு இவருக்குப் பல தொல்லைகள் ஏற்ப்பட்டன. ஹிட்லர் இந்தியாவையும் இந்தியர்களையும் கேவலமாகப் பேசப்போக, அதனை வன்மையாகக் கண்டித்த செண்பகராமன் அவனை மன்னிப்பு கேட்க வைத்தார். விடுவான வஞ்சனையின் வடிவமான ஹிட்லர். இந்த இந்திய வீரனுக்குக் குழி பறிக்கத் தொடங்கினான். அதன் விளைவு 1936இல் வீரன் செண்பகராமன் மரணத்தைத் தழுவினார்.
