செ.வை.சண்முகம்
அவரின் கல்விக்காலம்:
செங்குந்த புரத்தில் தொடக்கக் கல்வியையும், உடையார்பாளையத்திலும், ஜெயங்கொண்டத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியையும் படித்தவர்.
பின்னர் அருகில் உள்ள நகரான கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இண்டர்மீடியட் (1950-1952) கல்வியையும் முடித்தவர். அதன் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஆனர்சு) (1952-1955) தமிழ் சிறப்புப்படிப்பும் பயின்றவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் ச.அகத்தியலிங்கனார் ஆகியோரின் வழிகாட்டலில் எம்.லிட் பட்டத்தையும்(1959), முனைவர் பட்டத்தையும்(1967) பெற்றார்.
இவர் பயின்ற காலங்களில், தமிழறிஞர்களான பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், கவிஞர் மு.அண்ணாமலை, பேராசிரியர் பூவராகம் பிள்ளை, பேராசிரியர் முத்துச்சண்முகம் பிள்ளை உள்ளிட்ட புகழ்பெற்ற அறிஞர்கள் பணிசெய்துகொண்டிருந்தனர். இவர்களிடமும் கல்வி கற்றார். இவருடன் கல்வி பயின்றவர்களுள், கு.சிவஞானம், கு.சிவமணி, வெள்ளையன், வரதராசன், தேவராசன், திருஞானசம்பந்தன், லூசிமேரி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
அவரின் பணிக்காலம்:
கேரள மாநிலத்திலுள்ள, பாலக்காடு விக்டோரியா அரசினர் கல்லூரியில் ஒரு சில மாதங்கள் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்(1955) பணியேற்றார்.சற்றொப்ப முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், இயக்குநர் உள்ளிட்ட பல நிலைகளில் பணிபுரிந்து, 1992 -இல் பணி ஓய்வுப் பெற்றவர்.
இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் உயராய்வு(1972 -73) மேற்கொண்டு, அருங்காட்சியகத்தில் இருந்த சுவாமிநாதம் என்ற ஐந்திலக்கண நூலைப் பதிப்பித்து வழங்கினார்.
இந்தோனேசியாவிலுள்ள சகார்த்தா பல்கலைக்கழகத்தில் இரண்டரை ஆண்டுகள்(1976-78) வருகைதரு பேராசிரியராகப் பணி செய்து, தனித்திறமையை வெளிப்படுத்தியவர்.அப்பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வுகள், "Indonesian studies", என்ற நூலாக வெளிவந்தது.மேலும் அங்கு நடந்த எழுத்துச்சீர்திருத்தத்தை ஒட்டி, தமிழில் செய்யவேண்டிய திருத்தங்களை எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் நூலாக்கினார். மலேசியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள, இந்தியக் கல்வித்துறையில் மூன்றாண்டுகள் வெளிநாட்டு வல்லுநராகப் பணிபுரிந்தவர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகில் உள்ள மாரியப்பா நகரில் வாழ்ந்துவரும் பேராசிரியர், அறிஞர் ச.அகத்தியலிங்கனார், பேராசிரியர் இரா.சாரங்கபாணியார், திரு.சாமிநாதன் உள்ளிட்டவர்களுடன் ஆய்வுத் தொடர்பாக உரையாடும் வழக்கத்தையும் கொண்டவர்.
இவரால் மொழியியல் துறையில் தரமான பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழ் மரபு இலக்கணங்களை, மொழியியல் நோக்கில் ஆராய்ந்து எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு உள்ளிட்ட நூல்களை வழங்கியவர். இவர் தமது வாழ்நாளில் 26-க்கும் மேற்பட்ட நூல்களையும், 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.
அவர் இயற்றிய நூல்கள் சில:
-
சுவாமிநாதம்(உரையும் பதிப்பும்),1975
-
எழுத்துச் சீர்திருத்தம், 1978
-
எழுத்திலக்கணக் கோட்பாடு, 1980, 2 ஆவது பதிப்பு 2001
-
சொல்லிலக்கணக் கோட்பாடு-1, 1984
-
மொழியும் எழுத்தும், 1985
-
சொல்லிலக்கணக் கோட்பாடு-2, 1986
-
மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்(சங்க காலம்), 1989
-
மலையாள மொழியின் முதல் இலக்கணம், 1992
-
சொல்லிலக்கணக் கோட்பாடு-3,1992
-
கிறித்தவ அறிஞர்களின் இலக்கணப்பணி,1993
-
ஆங்கில நூல்கள்:
-
Naccinarkkiniyar′s conception of phonology,1967
-
The language of Tamil Inscription 1250-1350 A.D(with prof.S.A)
-
Dravidian Nouns(A comparative study),1971
-
Indonesian Studies,1979
-
Aspects of Language development,1983
-
விருதுகள்:
-
2001 நெய்வேலி புத்தகத் திருவிழாவில் இலக்கண இலக்கிய ஆய்வு சாதனையாளர் சான்றிதழ்
-
2011ஆம் ஆண்டு ராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது.
-
2012 ஆம் ஆண்டு எஸ், ஆர்,எம். பல்கலைக்கழக பரிதிமாற் கலைஞர் விருது ( இரண்டு இலட்சம் ரூபாய் பரிசு ) சான்றிதழ்
-
2011- 12 ஆண்டுக்கு உரியது 2015இல் வழங்கல் மத்திய அரசின் தொல்காப்பிய விருது, (ஐந்து இலட்சம் ரூபாய், 2011/ 12)
-
2014 தமிழ் நாடு அரசின் கம்பர் விருதும்( 2015இல் வழங்கல்) ஒரு இலட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கக் காசு மற்றும் சான்றிதழ்.
-
2016 இல் உலகத் தமிழர் பேரவை அமைப்பு, சென்னை, அளித்த உலகப்பெருந் தமிழர் விருது.
