தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் - இனி - அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் - பார்க்குமோ? 1
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம்; - முடி - தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ மானமோ? 2
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் வெல்லமோ? 3
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் - சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இது
நீதமோ? - பிடி - வாதமோ? 4
பார தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் - தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் - செற்றமோ? 5
ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோம்;
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவு றோம்; - சித்தம் - கலைவுறோம். 6
சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் - வேகுமோ? 7
