பிரபுல்ல சந்திர ரே

bookmark


பிரபுல்ல சந்திர ரே 1861-ல் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் மேற்கு வங்காளத்திலுள்ள குல்னா மாவட்டத்தில் (தற்போதைய வங்கதேசத்திலுள்ளது) ராகுலி-காட்டிபரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஹரிஷ் சந்திர ரே என்பவர். இவர் ஒரு பண்ணையார். வடமொழி, பெர்சிய மொழி, ஆங்கிலம் மூன்றிலும் புலமை பெற்றவர். ஆங்கில நாகரிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவருடைய சிந்தனைகள் பகுத்தறிவு அடிப்படையிலேயே அமைந்திருந்தன. சமுதாய நடவடிக்கைகள், இசை, கல்வி இவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். எனவே, தனது மகன் 'பிரபுல்ல சந்திர ரே' வின் இளமைக் கல்வி தந்தையின் வழிகாட்டுதலின் படி சிறப்பாக அமைந்தது. ஒன்பது வயது வரை இவருடைய கிராமத்திலேயே கல்வி பயின்றார்.

1870-ல் இவருடைய குடும்பம் கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தது. அங்கு சில ஆண்டுகள் ஹேர் பள்ளியில் படிப்பைத்தொடர்ந்தார் ரே. அப்போது இவருடைய உடல் நலம் குன்றி பள்ளிக்குச் செல்வது தடைப்பட்டது. ஆயினும் வீட்டில் இருந்த படியே தீவிரமாகப் படித்தார். உடல் நலம் தேறிய பின்னர் மீண்டு படிப்பைத் தொடர்ந்தார். நன்கு படித்து முதல் மாணவராகத் திகழ்ந்தார். பள்ளிப் படிப்பின் போது, வழக்கமான பள்ளிப் படிப்போடு ஆங்கிலம் மற்றும் வங்க இலக்கியங்களைக் கற்று வந்தார். பத்து வயது இருக்கும்போதே இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இங்கிலாந்து, ரோம், ஸ்பெயின் நாடுகளின் வரலாறுகளைக் கற்றறிந்தார். இதனால் அவர் புத்தகப் புழுவாகவே மாறினார்.

1874 -ல் ஆல்பர்ட் பள்ளியில் சேர்ந்தார். இவருடைய நுண்ணறிவு அங்குள்ள ஆசிரியர்களைக் கவர்ந்தது. ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும் முறைகளால் இவர் கவரப்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக தேர்வு எழுதாமல் இவர் பிறந்த கிராமத்திற்குச் செல்ல வேண்டி வந்தது. பிறகு 1876-ல் கொல்கொத்தா திரும்பி ஆல்பர்ட் பள்ளியிலேயே தன் படிப்பைத் தொடந்தார். தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளையும் பல்வேறு பரிசுகளையும் வென்றார்.

1879 -ல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மெட்ரோ பாலிடன் நிலையத்தில் (தற்போது இது வித்யாசாகர் கல்லூரி) சேர்ந்தார். இதற்குள் இவருடைய குடும்பம் தங்களுடைய சொத்துக்களை இழந்து வறுமையின் பிடியில் சிக்கியது. வறுமையில் வாட வாட ரேயின் உழைப்பு அதிகரித்தது. அதே நேரம் இவரின் குடும்பம் மீண்டும் தங்கள் கிராமத்திற்கே திரும்பியது. ஆனால் இவர் கொல்கத்தாவில் தங்கித் தன் படிபைத் தொடர்ந்தார்.

மெட்ரோ பாலிடன் நிலைய ஆசிரியர்கள் பாடங்களைப் போதித்ததோடு அல்லாமல் அன்றைய நாளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் சுதந்திர உணர்வையும், நலிவடைந்த மக்களின் உயர்வுக்கு வேண்டிய பணிகளையும் ரேயின் மனதில் ஊட்டி வளர்த்தனர். மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றிபெற்று பிறகு மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, வேதியலைப் பாடமாக எடுத்துக் கொண்டார். அதே சமயம் இவர் வடமொழி, லத்தீன், பிரெஞ்சு போன்ற பல மொழி கற்பதையும் விடவில்லை.

எடின்பரோ பல்கலைக் கழகத்தில் பயின்ற போது ' இந்தியா - சிப்பாய்க் கலகத்திற்கு முன்னும் பின்னும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட ரே இந்திய வரலாற்றை ஆய்வு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுதினார். அப்போட்டியில் இவருக்குப் பரிசு கிடைக்க வில்ல . எனினும் பரிசளிப்பு விழாவில் அப்பல்கலைக் கழக முதல்வர் இவருடைய கட்டுரையைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அக்கட்டுரை பிறகு சக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டது. இதனால் இவருடைய புகழ் லண்டனில் பரவியது. இந்தியாவின் சிறந்த நண்பராகத் திகழ்ந்த 'ஜான் பிரைட் என்ற ஆங்கிலேயப் பாராளுமன்ற பிரதிநிதிக்கு இது அனுப்பப்பட்டு, அவர் பிரபுல்ல சந்திரரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். இவர் படிக்கும் போதே பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். 1887 -ல் டி. எஸ்.ஸி படம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

1888- ல் இந்தியா திரும்பிய ரே பணியைப் பெற போராடினார். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் பல உயர் பதவிகளில் எல்லாம் ஆங்கிலேயரே இருந்தனர். இவர் இங்கிலாந்தின் பல பேராசிரியர்களிடம் பரிந்துரைக் கடிதங்களை வாங்கி வந்த போதும், லண்டனில் அறிவியல் முனைவர் பெற்ற முதல் இந்தியர் என்ற போதும் சொந்த நாட்டில் ஒரு பணியைப் பெற போராட வேண்டியதாயிற்று. அப்பொழுது புகழ் பெற்றிருந்த அரிவியல் அறிஞர் ஜகதீஸ் சந்திர போஸ் நடத்திவந்த ஆய்வுச் சாலையில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

1896 -ல் மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பதவியேற்றார். அன்றைய நாளில் அவருடைய சம்பளம் ரூ 250 மட்டுமே. ஆனால், அவர் மிகச் சிறந்த ஆசிரியராக அனைவரையும் கவரத்தக்க வகையில் பணியாற்றினார். மாணவர்களிடம் ஆய்வு மணப்பான்மையை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார். இந்தப் பணியில் இருந்து கொண்டே வீட்டிலும் ஓர் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். தன் மாணவர்களையும், அந்த ஆய்வுக் கூடத்தில் ஆய்வுகளைச் செய்ய அனுமதித்தார்.மேக்நாத் சாகா, சாந்தி இசுவரூப் பட்நாகர் ஆகிய தலைசிறந்த அறிவியலாளர்களை உருவாக்கியவர் ரே.

ஆயுர்வேதம் பற்றியும் இவர் ஆராய்ந்தார். " இந்திய வேதியல் வரலாறு" என்ற மிகச் சிறந்த நூலைப் பத்தாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதி வெளியிட்டார். இந்திய நாட்டு மூலிகைகளைப் பற்றி அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தார். அவற்றிலிருந்து மருந்துகளை எப்படித் தயாரிக்கலாம் என்பதற்கான முயற்சிகளைல் ஈடுபட்டார். இதன் பயனாக " வங்காள வேதியல் மற்றும் மருந்துகள் தொழிற்சாலை"(பெங்கால் கெமிக்கல்சு அன் பார்மசூட்டிகல்சு) என்ற இந்தியாவின் முதல் மருந்துத் தொழிற்சாலையை 1901 -ல் நிறுவினார். தனது வேதியல் ஆய்வுகளின் மூலம் " பாதரச நைட் ரேட்" டைக் கண்டு பிடித்தார்.

வேதியல் ஆய்வுகளோடு நின்று விடாமல் 'இந்திய வேதியல் கழகம்', 'இந்திய வேதியல் பள்ளி' ஆகியவறையும் தொடங்கினார். மாநிலக் கல்லூரியில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1936 -ல் இதிலிருந்து ஓய்வு பெற்று கொல்கத்தா பல்கலைக் கழத்தில் மதிப்பியல் சிறப்புப் பேராசிரியராகப் பதவியேற்றார்.

இவர் தாம் பிறந்த இந்தியத் தாய்த்திருநாட்டைப் பெரிதும் நேசித்தார். தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். 16-6-1944 -ல் இவர் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார்.

1919-ல் அப்போதைய ஆங்கிலேய அரசு இவரைப் பாராட்டி "Companion of the Indian Empire" என்ற பட்டத்தையும், பிறகு "சர்" என்ற பட்டத்தையும் கொடுத்துச் சிறப்பித்தது. இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து அவர் பெயரில் "பி.சி.ரே விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் இந்திய அரசால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

வங்காள மொழி வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டார், இதற்கு அடையாளமாக, ஆச்சார்யா பிரபுல்ல சந்திரா கல்லூரி, ஆச்சார்யா சந்திர ராய் பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவை வங்காள தேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவுகூறுகின்றன. இவர் பெயரில் வங்க தேசத்தில் ஒரு சாலையும் உள்ளது. இதே போல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு அதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய சமூக சீர்திருத்த மாநாட்டில் தீண்டாமையின் கொடுமையை கடுமையாக சாடினார்.