மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளிக் கிழங்கு

bookmark

மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும்.

இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ம. எசுக்கியூலெண்டா தாவர இனத்தின் துணை இனமான பிளபெலிபோலியா என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக் கருதப்படுகின்றது.

இக் காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, மெக்சிக்கோ குடாவின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள சான் ஆண்ட்ரெசு தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி காணப்பட்டது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன் காலத்துத் தொல்லியல் களமான ஜோயா டி செரனில் மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன.

தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக ஆகிவிட்டது.

போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்றவாதக் காலங்களிலும், இப் பகுதியில் மரவள்ளிச் செய்கை தொடர்ந்து நடைபெற்றது. கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம்பெற்றது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங்களில் மரவள்ளியை வரைந்தனர்.

அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.