மிதிலைக் காட்சிப் படலம் - 622
622.
‘பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்.
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அக் குமரனை. இன்னும். கண்ணிற் கண்டு.
அறிந்து. உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்?’
பிறந்த உடை - (என்) உடன் பிறந்து எனக்கு உடைமையாயுள்ள;
நலம்நிலை - நல்ல மனவுறுதி ஆகிய; பிணித்த எந்திரம்
- கட்டமைந்த இயந்திரம்; கறங்குபு திரியும் - சுழன்று திரிதற்கு
இடமான; என் கன்னி மாமதில் - (காவல் புரியும்) மதிலின் மேல்
பொருத்தப்பெற்றுப் பிறரை அணுகவிடாது காக்கும் எனது கன்னித்
தன்மையாகிய பெரிய மதிலை; எறிந்த - அழித்துச் சென்ற;
அக்குமரனை - அந்தக் குமரனை; இன்னும் - மற்றொருமுறை;
கண்ணில் கண்டு - கண்களால் கண்டு; அறிந்து - அவனை
(இன்னான் இத்தகையவன் என) அறிந்து; உயிர் இழக்கவும் -
(அதன் பின்பு) எனது உயிரை இழக்கவாயினும்; ஆகுமே கொல் ஆம்
- கூடுமோ?
கன்னிமை மனத்துள்ளே ஓர் ஆடவனும் செல்லமுடியாதபடி காத்து
வருதால் அதனை ‘மதில்’ என்றார்; நிறை அந்தக் கன்னிமைக்கும்
காவலாய் நின்று உறுதி தருவதால் அதனை ‘எந்திரம்’ என்றார்.
உருவகம்: ‘’காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும். நாணுத்தாழ்
வீழ்ந்த கதவு’’ (குறள்: 1251). அந்தக் குமரனைக் கண்டு அவனை
அணைய முடியாது போயினும் இன்னான் இனையான் என அறிய
இயலுமா? நானோ காம தேவனைப் பட்டு உயிர் துறப்பது உறுதி;
ஆனால் அவனை என் கணகளால் கண்டு களித்தால் அதன்பின் என்
உயிர் போவதாயினும் போகுக. அதுவும் எனது பேறே. இயந்திரம்
மதில் உறுப்பு. 59
