மிதிலைக் காட்சிப் படலம் - 625

bookmark

அந்திமாலை வருணனை (625-626)

625.

விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்.
எரி நிறச் செக்கரும். இருளும். காட்டலால்.
அரியவட்கு அனல் தரும் அந்திமாலையும்
கரு நிறச் செம் மயிர்க் காலன் தோன்றினான்.
 
விரிமலர்த்     தென்றலாம்- மலர்ந்த பூக்களின் படிந்து  வரும்
தென்றலாகிய;  வீசு   பாசமும் -  வீசிப்  பிணிக்கும்  பாசாயுதமும்;
எரிநிறச் செக்கரும் - தீயைப் போன்ற நிறமுடைய  செவ்வானமாகிய
செம்பட்டை  மயிரும்;  இருளும்  -  இருளாகிய  கரிய நிறத்தையும்;
காட்டலால் - தன்னிடத்தே தோன்றக் காண்பித்தலாலே; அரியவட்கு
-   அருமையானவளாகிய   சீதைக்கு;   அனல்   தரும்  - காமத்
தீயை  வளர்க்கின்ற;  அந்தி   மாலை  ஆம்  -   அந்திக் காலம்
என்கின்ற;  கருநிறம்  -  கரிய  நிறமும்;  செம்  மயிர்  - சிவந்த
மயிர்களையும் உடைய; காலன் தோன்றினான் - இயமன் வந்தான்.   

சீதை     காமவேதனையால்  வருந்தும்பொழுது  அதை   மேலும்
வளர்க்கும்.  அந்திப்பொழுது வந்தது; அது அவளுக்கு இயமன் வந்து
தோன்றியதுபோல  இருந்தது.   என்றார்.  செக்கர்:  செவ்வானம்  -
பண்பாகுபெயர்.    அரியவள்:   பிற   பெண்களிடம்  காணப்பெறாத
அருமையான பண்புகளையுடையவள்.                         62