மிதிலைக் காட்சிப் படலம் - 630
இருளைநோக்கிப் புலம்பல்
630.
‘ஆலம் உலகில் பரந்ததுவோ?
ஆழி கிளர்ந்ததே? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும்
நினைக்க. அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில்
கலந்து குழைத்து. காயத்தின்
மேலும் நிலத்தும். மெழுகியதோ?-
விளைக்கும் இருளாய் விளைந்ததுவே!
விளைக்கும் - (துன்பம்) உண்டாக்குகின்ற; இருளாய் - இருள்
உருவமாய்; விளைந்தது - முதிர்ச்சி அடைந்துள்ளது; ஆலம் உலகில்
- ஆலகால நஞ்சு உலகெங்கும்; பரந்ததுவோ - பரவியதுதானோ?;
ஆழி கிளர்ந்ததோ - கருங்கடல் மேலே பொங்கி எழுந்ததுதானோ?;
அவர்தம் நீல நிறத்தை - அந்த உத்தமனது திருமேனியின் நீல
நிறத்தை; எல்லோரும் நினைக்க - (உலகில்) யாவரும் நினைத்தால்;
அதுவாய் நிரம்பியதோ - எங்கும் அந்நிறமே ஆகி
வியாபித்ததுதானோ?; காலன் நிறத்தை - இயமனது கருநிறத்தை;
அஞ்சனத்தில் கலந்து - மையோடு கலந்து; குழைத்து - குழைத்து
(அதனை); காயத்தின் மேலும் - வானத்தின் மேலும்; நிலத்தும்
- பூமியின் மீதும்; மெழுகியதோ - (முழுவதும்) பூசியதுதானோ?
காயம்: ஆகாயம். முதற்குறை: அணி: தற்குறிப்பேற்றவணி. ஆலம்.
காலன் நிறம்; யாவர்க்கும் அச்சம் ஊட்டுவன. ஆழி: பிரிந்தார்க்கு
வருத்தம் ஊட்டுவது. 67
