மிதிலைக் காட்சிப் படலம் - 631

bookmark

அன்றிற்பறவையை நோக்கி இரங்கியது

631.

‘வெளி நின்றவரோ போய் மறைந்தார்;
   விலக்க ஒருவர்தமைக் காணேன்;
‘’எளியன். பெண்’’ என்று இரங்காதே.
   எல்லியமாத்து இருளூடே.
ஒளி அம்பு எய்யும் மன்மதனார்.
   உனக்குஇம் மாயம் உரைத்தாரோ?
அளியென் செய்த தீவினையோ!
   அன்றில் ஆகி வந்தாயோ?
 
(ஓ பறவையே) வெளிநின்றவரோ- (என் கண்முன் சிறிது  நேரம்)
வெளிப்பட்டுத்   தோன்றிய   தலைவரோ;    போய்   மறைந்தார்
- (இப்பொழுது)  மறைந்து  சென்றார்; விலக்க -  (அவ்வாறு போகும்
அவைரப் போக  விடாமல்)  டுப்பதற்கு; ஒருவர்தமைக் காணேன் -
ஒருவரையும் (நான்)   காணவில்லை;   எளியள்   பெண் என்று -
(இப்படிக் கதியற்ற)  எளிமையுள்ள  பெண் என்று கருதி்;  இரங்காதே
- (சிறிதும்) இரக்கம் கொள்ளாமல்; எல்லியாமத்து- இரவுக்  காலத்தின்;
இருள் ஊடே - இருளிடையே; ஒளி  அம்பு  எய்யும்  -   ஒளிந்து
நின்று அம்புகளை  (என்மேல்) எய்யும்; மன்மதனார் -   காமதேவன்;
உனக்கு  இம்  மாயம்  -  உனக்கு   இந்த   வஞ்சகச்   செயலை;
உரைத்தாரோ - சொல்லிக்  கொடுத்தானோ?; அளியென் செய்த  -
(அல்லாது) எளியவள் முற்பிறப்பில் செய்த; தீவினையோ -  பாவமோ;
அன்றில்  ஆகி   (இந்தப்  பிறப்பில்)  அன்றில்   உருவங்கொண்டு்;
வந்தாயோ - (என்னை) வருத்த வந்தாயோ?

அன்றில்     -  இப்பறவை   இனத்தில்    ஆணும்  பெண்ணும்
எப்பொழுதும்  கூடிய  இருக்கும். இது இரவில் துணையைப் பிரிந்தால்
வருந்தும்.  அந்த நலிவால் கூவுகின்ற குரலோசை தலைவரைப் பிரிந்து
வருந்துகின்ற  மகளிர்க்கு  அவ்  வருத்தத்தை வளர்ப்பதாகக் கூறுதல்
கவி  மரபு.  இம் மாயம்: இருளில் நின்று எனக்குத் தீங்கு  இழைக்கும்
வித்தை. கொடுமை. யாமம்: ஏழரை நாழிகை - இங்குப் பொழுது என்ற
பொருளில் வந்தது.                                        68