மிதிலைக் காட்சிப் படலம் - 633

bookmark

சந்திரோதயம் (633-634)

திங்களின் தோற்றம்
 
633.

பெருந்தின் நெடுமால் வரை நிறுவி.
   பிணித்த பாம்பின் மணித் தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி
   விசும்பின் மீனின் மேல் விளங்க.
அருந்த அமரர் கலக்கிய நாள்.
   அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்தது என
   எழுந்தது - ஆழி வெண்திங்கள்.
 
பெருந்திண்  - சிறந்த வலிய நெடுமால் - மிகவும் உயர்ந்த வரை
நிறுவி  -  மந்தர  மலையை  (மத்தாக)  நாட்டி  பிணித்த - (அதில்)
கட்டிய; பாம்பின் - (வாசுகி என்னும்) பாம்பாகிய; மணித்தாம்பின் -
முறுக்கேறிய   கடைகயிற்றால்;   அமரர்   அருந்த  -  தேவர்கள்
உண்ணுவதற்காக; கலக்கிய நாள் - (பாற்கடலைக்) கடைந்த காலத்தில்;
விரிந்த திவலை  -  (வெளியே)  தெறித்துப்  பரவிய நீர்த்துளிகளும்;
உதிர்ந்த மணி - சிதறின இரத்தினங்களும்; விசும்பின் மீனின்மேல்
-வானத்து  நட்சத்திரங்களைவிட  மிகுதியாக; விளங்க - விளங்குமாறு;
இடை  இருந்தது -  அக் கடலின் இடையிலே இருந்ததாகிய; அமுது
நிறைந்த -  அமுதம் நிறைந்த; பொன் கலசம் - பொன் கலசமானது;
வந்து எழுந்தது  என -  மேல்  எழுந்து தோன்றியதுபோல்; வெண்
திங்கள்  -  வெண்மை நிறமுள்ள சந்திரன்; ஆழி - கருங்கடலிருந்து;
எழுந்தது - உதித்தது.
  

கடலிடையே தோன்றிய சந்திரனைப் பாற்கடலின் நடுவே தோன்றிய
அமுதப்   பொற்கலசமாகக்  குறித்தார்.  அணி:   தற்குறிப்பேற்றவணி.
சந்திர  ஒளியால்  வெண்ணிறம்  அடைதல்  பற்றிக்   கருங்கடலுக்குப்
பாற்கடலும்.  அமுத  கிரணனான  சந்திரனுக்கு அமுத  கலசமும் ஏற்ற
உவமையாகும். மணித்தாம்பு - மணிக்கயிறு.                     70