வரைக்காட்சிப் படலம் - 899
மதக்களிற்றின் செயல்
899.
நேர் ஒடுங்கல் இல் பகையினை
நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன்
சூழ்ச்சியே போல.
காரொடும் தொடர் கவட்டு எழில்.
மராமரக் குவட்டை
வேரொடும் கொடு. கிரி என
நடந்தது - ஓர் வேழம்.
ஓர் வேழம் - ஒரு யானையானது; நேர் ஒடுங்கல் இல் - நேராக
அடங்காத; பகையினை - பகைவரை; நீதியால் வெல்லும் - (அரச)
தந்திரத்தால் வெல்லுகின்ற; சோர்வு இடம்பெறா - மனத்
தளர்ச்சியில்லாத; உணர்வினன் - நல்லுணர்வுடைய அரசனது; சூழ்ச்சி
போல - ஆலோசனை போல; காரொடும் தொடர் கவடு - மேக
மண்டலத்தை அளாவும் கிளைகளையுடைய; எழில் மராமரம் -
அழகிய மராமரத்தின்; குவட்டை - அடிப்பகுதியை; வேரொடும் கொடு
- வேரோடு பறித்துக்கொண்டு; கிரிஎன - மலைபோல; நடந்தது -
நடந்து சென்றது.
கட்டிய மரத்திலிருந்து தன்னை விடுவிக்க எண்ணிய
யானையொன்று. தன் சூழ்ச்சியால் அம் மரம் முழுவதையும் வேரோடு
சாய்த்து இழுத்துச் சென்றது. இது. தன்னைப் போரில் அகப்படுத்திய
பகைமன்னனிடமிருந்து விடுவிக்க வேண்டித் தந்திரத்தைக் கையாண்ட
தளராத ஊக்கமுடையவனது செயல் போன்றது. குவடு - ஆகுபெயர். 2
