வரைக்காட்சிப் படலம் - 901
ஒரு வேழம் மந்திரிக்கடங்கா மன்னனை நிகர்த்தல்
901.
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான்.
இனியன கழறி.
பதம் கொள் பாகனும் மந்திரி
ஒத்தனன்; பல் நூல்
விதங்களால். அவன். மெல்லென
மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை
ஒத்தது - ஓர் யானை.
கதம் கொள் சீற்றத்தை - கறுவு கொள்ளும் கோபத்தை;
ஆற்றுவான் - தணிக்கும் பொருட்டு; இனியன கழறி - (அந்த
யானைக்கு) இனிமையான வார்த்தைகளைக் கூறி; பதம் கொள் -
(பக்குவமாக அதனை) வசப்படுத்த முயலும்; பாகனும் - யானைப்
பாகனும்; மந்திரி ஒத்தனன் - (தவறான வழியில் செல்லும் அரசனை
வசப்படுத்த முயலும்) அமைச்சனை ஒத்திருந்தான்; ஓர்யானை -
(அப்போது அப் பாகனது இன்சொல்லைக் கொள்ளாது வெறிகொண்ட)
ஒரு யானையானது; பன்னூல் விதங்களால் - பல நூல்களில் கூறிய
முறைக்கு ஏற்ப; அவன் - அந்த அமைச்சன்; மெல்லென மெல்லென
- (மன்னவன் மனங்கொள்ளுமாறு) மெல்ல மெல்ல; விளம்பும் -
சொல்லுகின்ற; இதங்கள்- நன்மை பயக்கும் சொற்களை; கொள்கிலா -
காது கொடுத்துக் கேட்காத (மாறான வழிச்செல்லும்); இறைவனை -
அரசனை; ஒத்தது - ஒப்பதாக ஆயிற்று.
பாகனுடைய இன்சொல்லைக் கேளாது மதவெறி கொண்ட
யானைக்கு. அமைச்சனின் இனிய சொல்லைக் கேளாது மாறுவழியில்
நடக்கின்ற மன்னவன் உவமை. ‘மதக்களிறு வலியாக்.
கதம்தலையழியக் கந்தோடு ஆர்த்து சாமகீத ஓசையில் தணிக்கும்
நூலறி பாகரொடு’ - (பெருங் 1.44:61-64). 4
