வரைக்காட்சிப் படலம் - 907

bookmark

மகளிர் மரநிழலில் தங்குதல்

907.

உய்க்கும் வாசிகள் இழிந்து. இள
   அன்னத்தின் ஒதுங்கி.
மெய்க் கலாபமும் குழைகளும்.
   இழைகளும விளங்க.
தொக்க மென் மர நிழல் படத்
   துவன்றிய சூழல்
புக்க மங்கையர். பூத்த கொம்பு
   ஆம் எனப் பொலிந்தார்.
 
உய்க்கும்     வாசிகள் -  தாம் ஏறிச்செலுத்தும் குதிரைகளினின்று;
இழிந்து  -  இறங்கி;  இள  அன்னத்தின் - இள அன்னங்கள் போல;
ஒதுங்கி   -  மெல்ல  நடந்து;  தொக்க  மெல்  மரம்  -  அடர்ந்த
இளமரங்களின்;  நிழல்படத்  துவன்றிய  -  நிழல் படுமாறு அமைந்த;
சூழல்  புக்க - பொழிலிடத்தில் போய்ச் சேர்ந்த; மங்கையர் - மகளிர்;
மெய் - (தம்) மேனிகளில்; கலாபமும் - இடையணிகளும்;  குழைகளும்
-  காதணிகளும்;  இழைகளும்  -  பிற  அணிகலன்களும்; விளங்க -
விளங்குவதனால்;  பூத்த  கொம்பு  ஆம்  என - மலர்கள் பூத்துள்ள
கொம்புகள் என்னும்படி; பொலிந்தார் - திகழ்ந்தார்கள். 

இளமரமாதலின்     அதன்   அடியில்   நின்ற  மகளிர்  அணிந்த
அணிகலன்களின்   பொலிவால்   அம்    மரத்தின்   கீழே   படியும்
பூங்கொம்பு போலத் தோன்றினர்.                              10