வரைக்காட்சிப் படலம் - 908
மகளிர் பளிக்குப் பாறையில் உறங்குதல்
908.
தளம் கொள் தாமரை என. தளிர்
அடியினும். முகத்தும்.
வளம் கொள் மாலை வண்டு அலமர.
வழி வருந்தினர் ஆய்.
விளங்கு தம் உருப் பளிங்கிடை
வெளிப்பட. வேறு ஓர்
துளங்கு பாறையில். தோழியர்
அயிர்த்திடத் துயின்றார்.
(பொழில் புகுந்த அப் பெண்கள்) வழி வருந்தினர் ஆய் - வழி
நடந்த சோர்வால் வருந்தினராய்; வளம்கொள் மாலை வண்டு -
செழுமையாக வளர்ந்த வண்டுகள்; தளம் கொள் தாமரையென -
இதழுள்ள தாமரை மலரெனக் கருதி; தளிர் அடியினும் -
தளிரையொத்த தம் பாதங்களிலும்; முகத்தும் - முகத்திலும்; அலமர -
சுழன்று கொண்டிருக்க; விளங்கு தம் உரு - ஒளிவிடுகின்ற தமது
வடிவம்; தோழியர் அயிர்த்திட - (தம் தோழியர்) ஐயப்படும்படி;
பளிங்கிடை - பளிங்குப் பாறையில்; வெளிப்பட - வெளிப்படுவதால்;
வேறோர் துளங்கு பாறையில் - விளங்கும் வேறொரு பளிங்குப்
பாறையிலே; துயின்றார் - படுத்து உறங்கினார்கள்.
மங்கையர் வெகுதூரம் பயணம் வந்த களைப்பால் ஒரு பளிங்குப
பாறையில் படுத்துறங்கினர். அப்போது அவர்களின் பாதங்களையும்
முகத்தையும் கண்டு வண்டுகள் தாமரை மலரென்று மயங்கி அவற்றில்
மொய்க்கச் சுழல்வனவாயின. அவரது உருவம் வேறு ஒரு
பளிங்குப் பாறையில் பிரதிபலித்தது. அச்சாயையே ‘இது நம்
தலைவியின் உருவமே’ என்று தோழியர் மயங்கினர் என்பது -
மயக்கவணி. 11
