வரைக்காட்சிப் படலம் - 910
குதிரைகளைக் கூடத்திற் கட்டுதல்
வரிசையாகக் குதிரைகளைக் கட்டிவைத்தல்
கலிவிருத்தம்
910.
உண் அமுதம் ஊட்டி. இளை
யோர் நகர் கொணர்ந்த.
துண்ணெனும் முழக்கின.
துருக்கர் தர வந்த.
மண்மகள்தன் மார்பின் அணி
வன்ன சரம் என்ன.
பண் இயல் வயப் பரிகள்.
பந்தியில் நிரைத்தார்.
உண் அமுதம் ஊட்டி - உண்பதற்குரிய உணவை வாயினுள்
ஊட்டி; இளையோர் நகர் கொணர்ந்த - இளைஞர்களால் நகரில்
கொண்டு வரப்பட்டனவும்; துண்ணெனும் முழக்கின - திடுக்கிடும்
கனைப்பொலியையுடையனவும்; துருக்கர் தரவந்த - சோனகர் கொண்டு
வந்தனவுமான; பண் இயல் - அலங்காரம் அமைந்த; வயப் பரிகள் -
வலிய குதிரைகளை; மண்மகள் தன் மார்பின் - பூமி தேவியின்
மார்பில்; அணி வன்ன சரமென்ன - அணிந்த பல நிறமுள்ள நவமணி
மாலை போல; பந்தியின் - குதிரைக் கூட்டத்தில்; நிரைத்தார் -
ஒழுங்காகக் கட்டினார்கள்.
பல நிறத்தோடு கூடிய குதிரைகள் வன்னசரம் போன்றுள்ளன.
சோனகரால் ஏற்ற உணவளித்து வளர்க்கப்பட்ட குதிரைகள் அங்கு
வந்தன என்பது. 13
