வரைக்காட்சிப் படலம் - 911

bookmark

சேனைகட்கு வேண்டுவன செய்யப்படுதல்

911.

நீர் திரை நிரைத்த என. நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என. ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை என. களிறு காவிடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என. வாசிகள் நிரைத்தார்;
 
நீர்     திரை   நிரைத்த   என  -   நீரலைகளை   ஒழுங்காக
அமைத்தாற்போல;   நீள்   திரை  நிரைத்தார்  -  நீண்ட  (சுற்றுத்)
திரைகளை  வரிசையாகக்  கட்டினார்கள்;  ஆர்கலி  நிரைத்த  என -
கடல்கள் ஒழுங்காக அமைக்கப்பட்டன போல; ஆவணம் நிரைத்தார் -
கடைத்  தெருக்களை  வரிசையாக   அமைத்தனர்;  கார் நிரையென -
மேகங்களின்  வரிசை  என்று   சொல்லும்படி;  களிறு  கா இடை  -
யானைகளைச்  சோலைகளின்  இடையே;  நிரைத்தார்  -  வரிசையாக
நிறுத்தினர்;  மாருதம்  நிரைத்த என - காற்றை ஒழுங்காக நிறுவினாற்
போல; வாசிகள் நிரைத்தார் - குதிரைகளை வரிசையாகக் கட்டினர். 

தனித்     தனியே  தங்கியிருக்கப்  பட மாடங்கள் கட்டப்படுவதும்.
வேண்டிய  பண்டங்களை  வாங்குவதற்குக்  கடைவீதிகள்  அமைப்பதும்
சேனைகளுக்கு    இன்றியமையாதன.     உடன்     வந்த    யானை
குதிரைகளையும்   அவ்வவற்றிற்கு   உரிய   இடங்களில்  வரிசையாகக்
கட்டினர்.                                                  14