வரைக்காட்சிப் படலம் - 925
பாடிநகர் அமரர் நாடு போன்றிருத்தல்
சேனை மிகுதியின் பொலிவு
அறுசீர் விருத்தம்
925.
கமர் உறு பொருப்பின் வாழும்
விஞ்சையர் காண வந்தார்.
தமரையும் அறியார் நின்று
திகைப்புறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும்
குழுமலால். வழுவி விண்நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப்
பொலிந்தது. அவ் அனீக வெள்ளம்.
காண வந்தார் - (அச் சேனை வெள்ளத்தைக் காண
வந்தவர்களான); கமர் உறு பொருப்பின் வாழும் - பிளவுகளைக்
கொண்ட மலைகளிலே வாழுகின்ற; விஞ்சையர் - வித்தியாதரர்களும்;
தமரையும் அறியார் நின்று- தம் இனத்தவரை வேறுபாடு அறியாமல்;
திகைப்பு உறும் - திகைப்பதற்குக் காரணமான; தகைமை சான்ற -
அழகு மிக்க; குமரரும் மங்கைமாரும் - ஆடவரும் மகளிரும்;
குழுமலால் - கூடியிருத்ததலால்; அவ் அனீக வெள்ளம் - அந்தச்
சேனையின் பெருக்கு; அமரர் நாடு விண் நின்று - தெய்வ லோகம்
விண்ணிலிருந்து; வழுவி இழிந்தது என்ன - நழுவி விழுந்ததோ
என்னும்படி; பொலிந்தது - விளங்கியது.
பேரழகு படைத்த சேனை மாந்தரைக் கண்டு தேவர்களும் வியந்து
மயங்கி நின்றனர் என்பது. பேரழகு உள்ளவர் என்று பெயர் படைத்த
வித்தியாதரரும் திகைத்துப் பார்க்குமாறு அழகு வாய்ந்த மைந்தரும்
மகளிரும் கூடிய அச் சேனை வெள்ளம் திரண்ட அந்த இடம்
தேவலோகமே இங்கே வந்து தங்கியதோ என்று ஐயப்படும்படி
இருந்தது என்பது. 28
