தனி - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

930

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ

அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ

ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ

துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ

இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

6.95.1

931

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்

வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்

எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி

அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்

செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

6.95.2

932

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

6.95.3

933

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி

நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற

சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்

நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்

கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

6.95.4

934

திருக்கோயி லில்லாத திருவி லூருந்

திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்

பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்

விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

6.95.5

935

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்

தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்

உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்

அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்

பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

6.95.6

936

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்

நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்

மறைநான்கு மானாயா றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்

பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்

ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.

6.95.7

937

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்

அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்

எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்

பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ

எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.

6.95.8

938

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்

குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்

நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்

வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்

என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

6.95.9

939

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.

6.95.10

திருச்சிற்றம்பலம்