இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி
பிறப்பு:
துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி அல்லது இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 1873) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார். இவர் இராணி முத்து வீராயி நாச்சியாரால் தன் வாரிசாக நியமிக்கப்பட்டவராவார். இவர் இராணி முத்து வீராயி நாச்சியாரின் தங்கையான வீராயி என்பவரின் மகன் ஆவார்.
அவரைப்பற்றிய வாழ்கைக் குறிப்பு:
இந்த மன்னர் இளமைக்காலத்தில் அரசியல் அலுவல்களில் சிறிதும் அக்கரை இல்லாதவராக இருந்து வந்தார். ஆனால் அதே சமயம் இவர் இயல் தமிழின் இலக்கண, இலக்கியங்களிலும், இசைத் தமிழின் இராகம், மேளம் ஆகியவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அன்றைய தமிழ்ப்புலவர்கள் இவரை ‘நிமிசகவி’ என அழைத்தனர். நிமிட நேரத்தில் சிறந்த தமிழ்க் கவிதை ஒன்றை இலக்கண முறைப்படி இயற்றி முடிக்கும் தன்மை வாய்ந்த காரணத்தால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கப் பெற்றது. முந்தைய சேது மன்னர்கள் இராமேஸ்வரம் இராமநாதசுவாமியிடம், பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். ஆனால் இவர் முருகன் மீது குறையாத பக்தி கொண்டவராக இருந்தார். மேலும் முருகனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாதிட்டும் வந்தார். இவர் இயற்றிய 7 சிற்றிலக்கியங்களில் மூன்று முருகனைப் பற்றியது ஆகும். வள்ளி மணமாலை, ‘சரசசல்லாப மாலை’, ‘சடாக்கரப் பதிகம்’ என்பன அவை. இவரது பிற படைப்புக்கள் பாலபோதம், நீதிபோதம் என்பனவாகும். ஏறத்தாழ 1000 பாடல்கள் இவர் இயற்றியுள்ளார். மேலும் ஏராளமான தமிழ் இசைப்பாடல்களையும், பிறமொழிப் பாடல்களையும் இவரே இயற்றியுள்ளார். அவை, காயகப்பிரியா, ரசிகரஞ்சனம் என்ற இரு தொகுப்புக்களாக 1860இல் அச்சில் வெளிவந்துள்ளன.
அவர் இயற்றிய இலக்கியங்கள்:
-
வள்ளிமண மாலை
-
நீதிபோத வெண்பா
-
சரசல்லாப மாலை
-
மரபார மாலை
-
பால போதம்
-
சடாக்கரசாரப்பதிகம்
-
முருகரனுபூதி
-
காயகப் பிரியா
-
ரஸிக ரஞ்சனம்
-
அவர் இயற்றிய தனிப்பாடல்கள்:
-
சிலேடைப் பாடல்கள் 30
-
விடுகதைப் பாடல்கள் 5
-
முருகன் துதிப்பாடல்கள் - 250
-
நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் - 7
-
வினாவிடைப் பாடல்கள் - 75
-
இராஜராஜேஸ்வரி அம்மன் பேரில் பாடிய பாடல்கள் - 7
-
தனிப்பாடல்கள் - 6
-
சமுத்திர வருணனைப் பாடல்கள் - 11
-
தமிழ்ப் பணிகள்:
-
ஆறுமுக நாவலரைக் கொண்டு சைவ சாத்திரங்களை வெளியிட்டு உதவினார்.
-
இவரது சொந்த ஆக்கமான இசைப்பாடல்களைத் தொகுப்பாக அச்சிட்டு கி.பி. 1861-ல் வெளியிட்டார்.
-
பழனி மாம்பழக் கவிராயர் போன்ற சிறந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார்.
-
சேது புராணம் போன்ற இலக்கியங்களை சொந்தச் செலவில் அச்சிட்டு, தமிழ்ப் புலவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.
-
தில்லையம்பூர் புலவர் சந்திர சேகர புலவரைக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாடப்பட்டு வந்த தனிப் பாடல்களைத் தொகுக்கச் செய்து தமிழில் முதன் முறையாகத் தனிப்பாடல் திரட்டு என்ற நூல் வெளியீட்டை அச்சில் கொணர்ந்தார்.
-
இறப்பு:
இவருக்கு பாஸ்கர், தினகர் என்ற இரண்டு ஆண் மக்களும், இராணி பானுமதி என்ற பெண் மகளும் இருந்த நிலையில் தமது 32-வது வயதில் கி.பி. 1873-ல் காலமானார்.
