எழுச்சிப் படலம் - 888
தசரதன் புறப்படுதல்
தயரதன் சென்ற காட்சி
888.
நித்திய நியமம் முற்றி.
நேமியான் பாதம் சென்னி
வைத்த பின். மறை வல்லோர்க்கு
வரம்பு அறு மணியும் பொன்னும்.
பத்தி ஆன் நிரையும். பாரும்.
பரிவுடன் நல்கி. போனான்-
முத்து அணி வயிரப் பூணான்.
மங்கல முகிழ்த்த நல் நாள்.
முத்து - முத்துக்களினாலும்; அணிவயிரம் - அழகிய வயிர
மணிகளாலும்; பூணான் - இயன்ற அணிகளைப் பூண்டவனான
தசரதன்; நித்திய நியமம் முற்றி - (தன்) நித்தியக் கடமைகளை
முடித்துவிட்டு; நேமியான் பாதம் - சக்கரம் ஏந்திய திருமாலின்
பாதங்களை; சென்னி வைத்தபின் - (தன்) முடியிலே வைத்த பின்பு;
(குலதெய்வமான திருமாலை வணங்கின பின்னர்); மறை வல்லோர்க்கு
- வேதங்களில் வல்ல அந்தணர்களுக்கு; வரம்பு அறு - எல்லையற்ற;
மணியும் பொன்னும் - இரத்தினமும் பொன்னும்; பத்தி ஆன்
நிரையும் - வரிசையான பசுக் கூட்டங்களையும்; பாரும் - பூமியையும்;
பரிவுடன் - மன மகிழ்ச்சியோடு; நல்கி - தானம் செய்து; மங்கலம்
முகிழ்த்த- மங்கலம் மலர்ந்த; நன்னாள் - நல்ல நாளில்; போனான்-
புறப்பட்டுச் சென்றான்.
அரசர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் இரத்தினம். பொன்.
பசு. பூமி முதலியன தானம் செய்தல் மரபு. திருவடியைச் சென்னியில்
வைத்தல் என்பது வீழ்ந்து வணங்குதலாகும். 72
