எழுச்சிப் படலம் - 893

bookmark

ஒலியும் ஒளியும் மிஞ்சுதல்

893.

சங்கமும் பணையும் கொம்பும்
   தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த
   பேர் ஒலி மழையை ஓட்ட.
தொங்கலும் குடையும் தோகைப்
   பிச்சமும் சுடரை ஓட்ட.
திங்கள் வெண்குடை கண்டு ஓட.
   தேவரும் மருள. - சென்றான்.
 
சங்கமும்  -  சங்க  வாத்தியமும்;  பணையும்  - புல்லாங்குழலும்;
கொம்பும்   -   ஊதுகொம்புகளும்;   தாளமும்   -   கைத்தாளமும்;
காளத்தோடு  -   எக்காளமும்;   மங்கல   பேரி  -  மங்கலத்தைத்
தெரிவிக்கும்  பேரிகையும்;  செய்த  பேரொலி  -  எழுப்பிய  பெரிய
ஓசையானது;  மழையை  -  மேகத்தில்  தோன்றும் இடியை; ஓட்ட -
துரத்தவும்;  தொங்கலும்  -  பூமாலைகளும்; குடையும் - குடைகளும்;
தோகைப்  பிச்சமும்  -  ‘மயிலின் தோகையால் செய்த பிச்சங்களும்;
சுடரை  ஓட்ட -  வெயிலை  மறைக்கவும்;  திங்கள்  வெண்குடை -
சந்திரன்  வெண்கொற்றக்  குடையை;  கண்டு  ஓட - கண்டு ஓடவும்;
தேவரும்  மருள - தேவர்களும் மயங்கும்படி; சென்றான் - (தசரதன்)
மேன்மையாகப் போனான். 

தொங்கல்     முதலியன  அரசர்   செல்லும்போது  பிடிக்கப்படும்
விருதுகள்.   பிச்சம்   -   மயில்பீலியால்   செய்யப்  பெற்ற  ஒன்று.
வெண்கொற்றக்  குடையின்  நிறமும்.   குளிர்ச்சி  தரும்  பெருமையும்
தனக்கு   இல்லையே   என்று   சந்திரன்  வெட்கப்பட்டு   ஓடினான்
என்பது.                                                 77