எழுச்சிப் படலம் - 897
தசரதன் சந்திர சயிலத்தின் சாரலில் தங்குதல்
சந்திரசயிலச் சாரலில் தங்குதல்
897.
இன்னணம் ஏகி. மன்னன்
யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்து
சயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும். மாதர்
கொங்கையும். மாரன் அம்பும்.
தென்வரைச் சாந்தும். நாறச்
சேனை சென்று. இறுத்தது அன்றே.
மன்னன் - மன்னவர்க்கு மன்னனாகிய தசரதன்; இன்னணம் -
இவ்வகையாக; ஏகி - புறப்பட்டு; யோசனை இரண்டு - இரண்டு
யோசனை தூரம்; சென்றான் - சென்றான்; பொன்வரை போலும் -
(பின்பு) மேரு மலையை ஒத்த; இந்து சயிலத்தின் - சந்திர சயில
மலையின்; சாரல் புக்கான்- சாரலை அடைந்தான்; மன்மதன் களிறும்
- மன்மதனது யானை என்று சொல்லப்படும் இரவு போன்ற
பெண்களின் கூந்தலும்; மாதர் கொங்கையும் - மாதரின் தனங்களும்;
மாரன் அம்பும் - மன்மதனுடைய அம்புகளாகிய மலர்களாலும்;
தென்வரை சாந்தும் - பொதிய மலைச் சந்தனத்தின் குழம்பாலும்;
நாறும் - நறுமணம் வீசுவதற்கு இடமாகவுள்ள; சேனையும் -
அச்சதுரங்க சேனையும்; இறுத்தது - (அம் மலைச் சாரலில்) தங்கியது.
மன்மதனது களிறு - கங்குலாகும். மகளிர் கூந்தலை உருவகமாக
‘மன்மதக் களிறு’ என்றார். முறை நிரல் நிரையணி. 81
