கார்முகப் படலம் - 750

bookmark

சனகனின் விருப்பம்

750.    

‘மாற்றம் யாது உரைப்பது?
   மாய விற்கு நான்
தோற்றனென் என
   மனம் துளங்குகின்றதால்;
நோற்றனள் நங்கையும்;
   நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல். இடர்க் கடல்
   ஏற்றும்’ என்றனன்.
 
(சனகன்     விசுவாமித்திரனை  (நோக்கி)  மாற்றம் யாது- உமது
வார்த்தைக்கு  மாற்றமாக  என்ன; நான்  உரைப்பது - நான் சொல்ல
இருக்கின்றது;  மாய  விற்கு  -  வஞ்சனையமைந்த  இந்த  வில்லை;
கன்னியின்  திருமணத்திற்கு  காரணமாக வைத்தால்;  மனம் - (எனது)
விருப்பம்;   தோற்றனென்   என   -   தோற்றுவிட்ட  தன்மையை
எண்ணும்போது; துளங்குகின்றது-மிகக் கலங்குகின்றது; ஐயன்- வியத்
தகு  பண்புகளையுடைய இக்குமாரன்;   நொய்தின் - விரைவாக; வில்
ஏற்றுமேல்  -  சிவ  தனுசை  வளைத்து  நாண்  ஏற்றுவானேயானால்;
இடர்க்கடல்    ஏற்றும்   -   (என்னையும்)   துயரக்  கடலிலிருந்து
கரையேற்றினவனாவான்;   நங்கையும்  -  என்  மகளான   சீதையும்;
நோற்றனள்   -   (முன்  செய்த)  தவப்பேற்றைப்   பெற்றவளாவாள்;
என்றனன் - என்று கூறினான்.

‘முனிவரே!  இம் மைந்தரின் குலவரலாற்றோடு தோள்வலிமையையும்
கூறினீர்.  உமது  வார்த்தைக்கு  மறமாற்றம் சொல்வேனோ?   ஆனால்
பெண்ணின்    திருமணத்தின்   பொருட்டு   வைத்த  இந்த  வில்லை
இதுவரை  எந்த  வீரரும்  வளைத்து   நாணேற்றினாரில்லை;அதனால்
என்  மகள்  திருமணமும் நடைபெறாமல் என் மனம்   கலங்கியுள்ளது.
இச்  சிவ  தனுசை  இச்  சிறுவன்   நாணேற்றினால்   என் துன்பமும்
நீங்கும்;  இச்  சீதையும்  தவப் பேற்றைப்   பெற்றவளாவாள் என்றான்.
எவராலும்   வளைக்கமுடியாமல்   இருந்ததால்   இதனை   ‘மாயவில்’
என்றார்.                                                   1