கார்முகப் படலம் - 755
755.
‘கைதவம். தனு எனல்;
கனகக் குன்று’ என்பார்;
‘செய்தது. அத் திசைமுன்
தீண்டி அன்று; தன்
மொய் தவப் பெருமையின்
முயற்சியால்’ என்பார்;
‘எய்தவன் யாவனோ.
ஏற்றிப் பண்டு?’ என்பார்.
தனு எனல் - வில்லென்று சொல்லுதல்; கைதவம் - வஞ்சக்
சொல்லே; கனக் குன்று - (இது) பொன்மலையான மேருவாகும்;
என்பார் - என்று கூறுபவர்களும்; அத் திசைமுகன் - பிரமன்;
செய்தது - (இதனை) இயற்றியது; தீண்டி அன்று - (தன்கையால்)
தொட்டுப் பார்த்து இல்லை; (பின் எவ்வாறு இயற்றியது); தன்
மொய்தவம் - தனது நிறைந்த பெரிய தவத்தின்; பெருமையின்
முயற்சியால் - பெருமையால்; என்பார் - என்பாரும் ஆயினர்; பண்டு
ஏற்றி எய்தவன் - முற்காலத்தில் நாண் ஏற்றி (இதனை) எய்தவன்;
யாவனோ என்பார் - எவனோ என்று கூறுபவர்களும்.
சிவ தனுசிடம் அத்தன்மையை மறுத்து மேருவின் தன்மையை
ஏற்றிக் கூறியது - அவநுதியணி. இத்துணைப் பெரிய வில்லைப்
பிரமன் தன் கையால் இயற்றவில்லை; தன் தவலிமையால்
இயற்றினான். 6
