கார்முகப் படலம் - 760
சதானந்த முனிவன் வில்லின் வரலாறு உரைத்தல்
760.
போதகம் அனையவன்
பொலிவை நோக்கி. அவ்
வேதனை தருகின்ற
வில்லை நோக்கி. தன்
மாதினை நோக்குவான். தன்
மனத்தை நோக்கிய
கோதமன் காதலன்
கூறல் மேறினான்;
போதகம் அனையவன் - யானைக் கன்றை யொத்தவனாகிய
இராமனது; பொலிவு நோக்கி- அழகைக் கண்டு; வேதனை தருகின்ற-
(அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்விக்க விரும்பி) துன்பம்
தருகின்ற; அவ் வில்லை நோக்கி - (தனது விருப்பத்திற்கு இடையூறாக
உள்ள) அந்த வில்லின் தன்மையையும் பார்த்து; தன் மாதினை
நோக்குவான் - (இந்த வில் மணமுடிக்கத் தடையாக உள்ளதே;இவள்
கன்னியாகவே மூப்பாளோ என்ற மனக் கவலையோடு) தன் மகளைப்
பார்க்கின்ற சனகனது; மனத்தை - மனக் கலக்கத்தை; நோகிய -
உணர்ந்த; கோதமன் காதலன் - கௌதமன் மகனாகிய சதானந்தன்;
கூறல் மேயினான் - சொல்லத் தொடங்கினான்.
போதகம்: இள வயதுடைய யானைக் கன்று. வில்லின் வரலாற்றைச்
சனகராசன் கூறுவதாக முதனூலில் உள்ளது. இங்கே சதானந்தன்
உரைப்பதாக அமைத்துள்ளார். தன் மாதினை நோக்குவான் மனம்
என்றது தன் அருமைப் பெண் கன்னியாகவே மூத்துக் கழிய நேருமோ
என்ற மனக் கவலையைக் குறிக்கும். 11
