கார்முகப் படலம் - 762

bookmark

762.    

‘உக்கன பல்லொடு கரங்கள். ஓடினர்;
புக்கனர். வானவர் புகாத சூழல்கள்;
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின;
முக் கண் எண் தோளவன் முனிவும் மாறினான்.
  
பல்லொடு    - (அவ்   வேள்விக்கு வந்த தேவர்களின்) பற்களும்;
கரங்கள் -   கைகளும்;   உக்கன  -  கீழே  சிந்தின;  வானவர் -
(அல்லாமலும்)  தேவர்களில் சிலர்; ஓடினர் - ஓடி; புகாத சூழல்கள் -
அதுவரை  தாம்  சென்று  அறியாத இடங்களில்;  புக்கனர் - பதுங்கிக்
கொண்டார்கள்;தக்கன் நல்வேள்வியில் தழலும் - தக்கனின் வேள்விக்
குண்டங்களில் எழுப்பிய நெருப்பும்; ஆறின - ஆறிவிட்டன;  முக்கண்
எண்தோளவன்   -   (இவ்வாறெல்லாம்   ஆன   பின்பே)   மூன்று
கண்களையும்   எட்டுத்   தோள்களையும்  உடைய  சிவன்;   முனிவு
மாறினான் - (தன்) சினமும் தணிந்தான்.

பல் உக்கது - கதிரவனுக்கு.                                13