குலமுறை கிளத்து படலம் - 735

bookmark

தசரதன் கலைக்கோட்டுமுனிவரை எண்ணுதல்

735.

‘சிலைக் கோட்டு நுதல். குதலைச்
   செங் கனி வாய். கரு நெடுங் கண்.
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல்.
   மின் நுடங்கும் இடையாரை.
‘’முலைக் கோட்டு விலங்கு’ என்று.
   தொடர்ந்து அணுகி முன் நின்ற
கலைக் கோட்டுப் பெயர் முனியால்.
   துயர் நீங்கக் கருதினான்;
 
சிலைக் கோட்டு நுதல்- வில்லைப் போல வளைந்த நெற்றியையும்;
குதலைச்  செங்கனிவாய்  -  (குழந்தைகளின்)  மழலை போல இனிய
சொற்களைப்   பேசுகின்ற   சிவந்த    கொவ்வைப்    பழம்  போன்ற
வாயையும்;  கரு  நெடுங்கண் - கரிய நீண்ட கண்களையும்; விலைக்கு
ஓட்டும்  -  விலைப்  பொருளுக்குத் தருகின்ற;  பேரல்குல் - பெரிய
அல்குலையும்; மின் நுடங்கும் - மின்னல் கொடிபோலத்  துவளுகின்ற;
இடையாரை    -    சின்ன    இடையையும்   உடைய   வேசியரை;
முலைக்கோட்டு - தனங்களாகிய கொம்புகளையுடைய; விலங்கு என்று
-   சில  மிருகங்கள்  என்று  கருதி;  தொடர்ந்து  அணுகி  -  தன்
ஆச்சிரமத்திலிருந்து  அவ் விலைமாதர்களைத் தொடர்ந்து;  முன்நின்ற
-  (உரோம பாத மன்னது) முன்னே வந்து சேர்ந்த; கலைக்  கோட்டுப்
பெயர்   -  கலைக்  கோட்டு  முனிவன்  என்னும்  பெயர்  தாங்கிய;
முனியால்   - முனிவனைக்  கண்டு;  துயர்  நீங்கக்  கருதினான் -
(குழந்தைப்  பேறு  இல்லாத)  தன்  துயரத்தைப்  போக்கிக்  கொள்ள
நினைந்தான்.

கலைக்கோட்டு  முனிவன்  -   தலையில்   கொம்பு   உடையவன்.
ருசியசிருங்கர் - வடமொழி வழக்கு.                            15