குலமுறை கிளத்து படலம் - 737
கலைக்கோட்டுமுனி வேள்வி தொடங்குதல்
737.
‘அவ் உரை கேட்டு. அம் முனியும்.
அருள் சுரந்த உவகையன் ஆய்.
“இவ் உலகம் அன்றியே.
எவ் உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளஞ் சிறுவர்களைத்
தருகின்றேன்; இனித் தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு
உரிய எலாம் வருக” என்றான்.
அவ்வுரை கேட்டு- (தசரதன் கூறிய) அந்த வார்த்தையைக் கேட்டு;
அம் முனியும் - அந்த ருசிய சிருங்க முனிவனும்; அருள் சுரந்த -
கருணை பொழிந்த; உவகையனாய் - மகிழ்ச்சியுடையவனாகி;
(அவ்வரசனை நோக்கி); இவ்வுலகம் அன்றியே - இந்த நிலவுலகம்
ஒன்றை மாத்திரம் அல்லாமல்; எவ் உலகும் - எல்லா
உலகங்களையும்; இனிது அளிக்கும் - இனிதாக (எளிதில்) காத்திடும்
படியான; செவ்வி இளஞ்சிறுவர்களை - அழகிய இளைய
மைந்தர்களை; தருகின்றேன் - (உனக்கு நான் இப்பொழுது)
கொடுத்திடுவேன்; இனி - இனிமேல்; தேவர் வவ்வி நுகர்- தேவர்கள்
(அவிசுகளைப் பெற்று உண்ணக் கூடிய; பெருவேள்விக்கு - பெரிய
யாகத்தைச் செய்வதற்கு; உரிய எலாம் - வேண்டிய பொருள்கள்
யாவும்; வருக என்றான் - (இங்கு) வந்து சேரட்டும் என்று
சொன்னான்.
தருகின்றேன் - விரைவும் தெளிவும் குறித்து எதிர்காலம்
நிகழ்காலமாக மயங்கிற்று. ‘எவ்வுலகும் இனிது அளிக்கும்’ - காத்தல்
தொழிலுக்கு உரிய திருமாலின் அம்சமானவர் என்பது
அறியப்பெறுகிறது. 17
