குலமுறை கிளத்து படலம் - 740
கௌசலை இராமனைப் பெறுதல்
740.
‘விரிந்திடு தீவினை செய்த
வெவ்விய தீவினையாலும்.
அருங் கடை இல் மறை அறைந்த
அறம் செய்த அறத்தாலும்.
இருங் கடகக் கரதலத்து இவ்
எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க்
கவுசலை என்பாள் பயந்தாள்.
விரிந்திடு தீவினை- (உலகில்) பரவிய பாவங்கள்;செய்த வெவ்விய
- பண்ணின கொடிய; தீவினையாலும் - பாவச் செயலாலும்; அருங்
கடை இல் - (அறிவதற்கு) அரிய எல்லையில்லாத; மறை அறைந்த -
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள; அறம் செய்த - தருமங்கள் செய்த;
அறத்தலும் - தருமத்தாலும்; செங்கனிவாய் - சிவந்த கொவ்வைக் கனி
போன்ற வாயையுடைய; கவுசலை என்பாள் - (மூத்தவளான) கவுசலை
எனப்படுபவள்; இருங் கடகக் கரதலத்து - பெரிய கடகம் என்னும்
அணி அணிந்த கைகளையும்; எழுது அரிய திருமேனி - சித்திரத்தில்
எழுத முடியாத அழகிய உடலையுமுடைய; இக் கருங்கடலை - கடல்
போன்ற கரிய நிறமுடைய இந்த இராமனை; பயந்தாள் - பெற்றாள்.
பாவம் அழியவும். புண்ணியம் வளரவும் இராமன் இவ்வுலகில்
அவதாரம் எடுத்தான் என்பதை ‘தீவினை செய்த தீவினையாலும்
அறம் செய்த அறத்தாலும் பயந்தாள்’ எனக் குறிப்பிட்டார். கடல் -
உவமையாகு பெயர். 20
