குலமுறை கிளத்து படலம் - 741
கைகேயி பரதனைப் பெறுதல்
741.
‘தள்ள அரிய பெரு நீதித்
தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை.
பரதன் எனும் பெயரானை.
எள்ள அரிய குணத்தாலும்
எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை.
கேகயர்கோன் மகள் பயந்தாள்.
தள்ள அரிய- (அறிந்தவர்களால்) விலக்கமுடியாத; பெரு நீதி -
சிறந்த நீதிகளாகிய; தனி ஆறு - ஒப்பில்லாத பெருநதிகள்; புக -
(தன்னிடம்) வந்து சேர்வதால்; மண்டும் - நிறைந்துள்ள; பள்ளம்
எனும் - ஆழமான கடலென்று சொல்லத்தக்க; தகையானை - நல்ல
பண்புகளைக் கொண்டவனும்; எள்ள அரிய - (யாராலும்)
இகழமுடியாத; குணத்தாலும் - நற்குணங்களாலும்; எழிலாலும் -
அழகாலும்; இவ் இருந்த - இங்கே அமர்ந்துள்ள; வள்ளலையே -
இந்த இராமனையே; அனையானை - ஒத்தவனுமாகிய; பரதன்
என்னும் பெயரானை - பரதன் என்னும் பெயருள்ள குமாரனை;
கேகயர்கோன் மகள் - கேகய நாட்டு மன்னன் மகளான கைகேயி;
பயந்தாள் - பெற்றெடுத்தாள்.
தமக்குத் தாடகை முதலியோரால் நிகழ்ந்த துன்பத்தைப் போக்கி
இன்பம் தந்தமையால் இராமனை விசுவாமித்திரன் வள்ளல் என்றான்.
நீதியாறுபுக மண்டும் பள்ளம் ஆற்று நீர் நிறைந்த கடல்போல் நீதி
நிரம்பினவன் எனலாம். 21
