குலமுறை கிளத்து படலம் - 745
இராமலக்குமணர்கள் தன் வேள்வி காத்தமை கூறல்
இராமன் வேள்வி காத்த திறம்
745.
‘ஈங்கு இவரால். என் வேள்விக்கு
இடையூறு கடிது இயற்றும்
தீங்குடைய கொடியோரைக்
கொல்விக்கும் சிந்தையன் ஆய்.
பூங் கழலார்க் கொண்டுபோய்
வனம் புக்கேன். புகாமுன்னம்.
தாங்க அரிய பேர் ஆற்றல்
தாடகையே தலைப்பட்டாள்.
என் வேள்விக்கு- என யாகத்திற்கு; கடிது - விரைந்து; இடையூறு
இயற்றும் - தடைகளைச் செய்கின்ற; தீங்கு உடைய - கொடிய
செயலையுடைய; கொடியோரை - தீய குணமுள்ள அரக்கர்களை;
ஈங்கு இவரால்- இங்குள்ள இந்த இராம லக்குவரால்; கொல்விக்கும் -
கொல்லச் செய்யவேண்டுமென்ற; சிந்தையனாய் - கருத்துடையவனாகி;
பூங்கழலார் - பூவின் மென்மையுடைய வீரக் கழல்பூண்ட இம்
மைந்தர்களை; கொண்டுபோய் - (தசரதனிடமிருந்து) அழைத்துக்
கொண்டு; வனம் புக்கேன் - தவ வனத்துள் சென்றேன்; புகாமுன்னம்
- (அவ்வாறு அவ் வனத்திற்குள்) சேர்வதற்கு முன்பே
(சேர்ந்தவுடனே); தாங்கு அரிய - (பிறரால் பொறுத்துக்
கொள்ளமுடியாத; பேராற்றல் - மிக்க வலிமையையுடைய; தாடகையே
- தாடகை என்னும் அரக்கியே; தலைப்பட்டாள் - முதலில் எதிர்த்து
வந்தாள்.
‘பூங்கழலார்க் கொண்டு போய் வனம் புக்கேன்’ என்பதில் இவர்தம்
மெல்லிய அடிகளைப் பரல் நிரம்பிய வனத்தில் நடக்கச் செய்தேனே
என்ற இரக்கக் குறிப்பும் புலனாகின்றது. 25
