ச.சோமசுந்தர பாரதியார்
கல்வி பயணம் :
சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார்.
நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் கலை முதுவர் பட்டம் பெற்றார்.
பாரதி பட்டம்:
அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.
அவர் செய்த தொழில்கள்:
சோமசுந்தர பாரதியார் சிறிது காலம் எழுத்தராகவும், தட்டச்சாளராகவும் பணியாற்றினார்.
1905 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் வழக்குரைஞராகத் தொழிலாற்றினார்.
1920 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலாற்றினார்.
1933 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் மாதம் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈடுபாடு:
சோமசுந்தர பாரதியார் 1905 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்றுகொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்தியத் தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் ஐயப்பாட்டு பட்டியலில் இடம்பெற்று இருந்தது.
வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் 'இண்டியன் நேவிகேஷன்' என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார்.
மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்:
1937ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.
ச.சோ.பாரதியார் எழுதிய திறந்த மடல்1937 செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25 ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்கு திறந்த மடல் ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.
1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார்.
தமிழ்ப்பணி:
இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தனது ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார்.
1932 -33 ஆம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.
சொற்பொழிவுகள்:
சோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16 ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார். இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.
மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA ) மதுரையில் 1926 ஜனவரி 26 ஆம் நாள் நடத்திய ஆய்வரங்கிலும் 1929 மார்ச் 11 ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் திருவள்ளுவர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரைகளே பின்னர் திருவள்ளுவர் என்னும் நூலாக வெளியிடப்பட்டன.
திராவிடர் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு தீபரவட்டும் என்னும் நூலில் இடம்பெற்று இருக்கிறது.
நூல்கள்:
ஆய்வு நூல்கள்
திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்.
-
தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
-
திருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.
-
சேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்
-
தமிழும் தமிழரும்
-
சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்)
-
அழகு
-
பழந்தமிழ் நாடு (1955)
-
நற்றமிழ் (1957)
-
படைப்பிலக்கியங்கள்:
சோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார். எனினும் பின்வரும் இரண்டு படைப்புகள் மட்டுமே நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன. -
மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)
-
மாரி வாயில் (1936)
-
சமூகச் சீர்திருத்தப்பணி:
சோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார்.
அப்பணியின் உச்சமாக, 1933 மே 13 ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்றி நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.
சோமசுந்தர பாரதியார் 1930, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் ஈழ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவர் பெற்ற பட்டங்களும் விருதுகளும்:
நாவலர் பட்டம் - ஈழ நாட்டிற்கு 1944 ஆம் ஆண்டு திசம்பர் 30 – 31 ஆம் நாள்களில் சோமசுந்தர பாரதியார் சென்றிருந்த பொழுது அங்குள்ள ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் நாவலர் பட்டத்தை அவருக்கு அளித்தது.கணக்காயர் விருது - 1954 சனவரி 17 ஆம் நாள் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சோமசுந்தர பாரதியாருக்குப் பொன்னாடை போர்த்தி கணக்காயர் என்னும் பட்டத்தை அளித்தது.
மதிப்புறு முனைவர் (Honorary Doctor) பட்டம் - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழாவில் சோமசுந்தர பாரதியாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
1959 சூலை 27 ஆம் நாள் மதுரையில் சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் அகவை நிறைவுப் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.
1959 அக்டோபர் 4 ஆம் நாள் மதுரை நகரவையும் தமிழகப் புலவர் குழுவும் இணைந்து சோமசுந்தர பாரதியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர்.
மறைவு:
1959 திசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7 ஆம் நாள் தன்நினைவு இழந்தார். திசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது.
