ச.வே.சுப்பிரமணியன்
ஆரம்ப வாழ்க்கை:
விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.
அவர் ஆற்றிய பணிகள்:
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளர் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராக வீற்றிருந்து புகழ்பெற்ற பல மாணவர்களை உருவாக்கினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுத் தமிழன்னைக்கு அழகு பார்த்தவர். இவர் காலத்தில் வெளியிட்ட நூல்கள் இன்றளவும் அரிய பார்வை நூல்களாகவும் பாடநூல்களாகவும் உள்ளன. கடும் உழைப்பாளியான இவர் தன் மாணவர்களையும் இவ்வாறு வளர்த்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் தமிழறிஞர்கள் பலர் இவர் மாணவர்களாக இருப்பர் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் இதுவரை எழுதப்பெற்ற நூல்காளகத் தமிழில் 54, ஆங்கிலத்தில் 5,மலையாளத்தில் 1 என்ற எண்ணிக்கையில் அமைகின்றன. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழங்கங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றியுள்ளார்.அவை பல நூல்வடிவம் பெற்றுள்ளன. தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் பங்கு பெற்றதுடன் இந்திய அளவிலும், உலக அளவிலும் பல கருத்தரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்ப் பணிக்காக இவர் இலங்கை, மொரீசியசு, செர்மனி, போலந்து, செக்கோசுலேவியா, ஜப்பான், ஆங்க்காங்கு, தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிசு, லண்டன், ஏதென்சு, கெய்ரோ போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர். இவர் மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்ப்பற்று மிக்குடைய பேராசிரியர் அவர்கள் 1985இல் தமிழூர் என்னும் ஊரை உருவாக்கி அங்கு வாழ்து வருகிறார். இவர் தம் வீட்டின் பெயர் தமிழகம். இடத்தின் பெயர் தமிழ்நகர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கியவர். இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் ஓரிலக்கம் உரூவா உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் இவரால் பெருமை பெற்றன. தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வதிலும், பாடம் சொல்வதிலும் ஒப்பாரின்றி உழைத்தவர். சிலப்பதிகாரம் பேராசிரியரின் உள்ளம் கவர்ந்த நூல் எனில் சாலப் பொருந்தும்.இசையுடன் பாடி விளக்கம் சொல்வதில் வல்லவர்.
முனைவர் அவர்களின் சில நூல்கள்:
-
இலக்கிய நினைவுகள் 1964
-
சிலம்பின் சில பரல்கள் 1972
-
இலக்கியக் கனவுகள் 1972
-
மாந்தர் சிறப்பு 1974
-
ஒன்று நன்று 1976
-
அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
-
இலக்கிய உணர்வுகள் 1978
-
கம்பன் கற்பனை 1978
-
காப்பியப் புனைதிறன் 1979
-
கம்பனும் உலகியல் அறிவும் 1981
-
கம்பன் இலக்கிய உத்திகள் 1982
-
கம்பன் கவித்திறன் 2004
-
இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
-
இலக்கிய வகையும் வடிவும் 1984
-
விருதுகள்:
இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி. ஆ. பெ. விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு " என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல்.ச.வே.சு " என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.
