சாலினி இளந்திரையன்

bookmark

ஆரம்ப வாழ்க்கை:

கனகசவுந்தரி தந்தை வே. சங்கரலிங்கம் மும்பை நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் மேலாளராகச் சிறிது காலமும் மதுரையில் இரண்டு ஆண்டுகளும் வாழ்ந்தார். எனவே கனகசவுந்தரி தனது எட்டாம் வயது வரை மும்பையிலும் பத்தாம் வயது வரை மதுரையிலும் வாழ்ந்தார். பின்னர் இவரது குடும்பம் விருதுநகருக்குத் திரும்பி அவ்வூரின் தெற்குத் தேர் வீதியில் குடியேறியது. இதனால் இவர் தனது 16ஆம் வயது வரை விருதுநகரில் வாழ்ந்தார்.

கல்வி:

கனக சவுந்தரி தனது தொடக்கக் கல்வியில் மூன்றாம் வகுப்பு வரை, 1938 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1942 ஆம் ஆண்டு மே மாதம் வரை, மும்பை நகரில் பெற்றார்.
1942 சூன் முதல் 1944 மே வரை நான்கு, ஐந்தாம் வகுப்புகளை மதுரையில் பயின்றார்.பின்னர் முதற் படிவம் (ஆறாம் வகுப்பு) முதல் ஆறாம் படிவம் (பதினொன்றாம் வகுப்பு) வரையிலான இடைநிலைக் கல்வியை 1944 சூன் முதல் 1950 மே வரை விருதுநகர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார்.
இவர் தன்னுடைய கல்லூரிக் கல்வியை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் தொடங்கினார்.
அங்கு 1950 சூன் முதல் 1952 ஏப்ரல் வரை இடைநிலை வகுப்பில் (Intermediate) படித்தார். அப்பொழுது அக்கல்லூரியின் தமிழ்மன்றத்தின் செயலாளராக 1950 – 51ஆம் கல்வியாண்டிலும் தலைவராக 1951 – 52 ஆம் கல்வியாண்டிலும் பணியாற்றினார்.
பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1952 சூன் முதல் 1954 ஏப்ரல் வரை தமிழிலக்கியம் பயின்று கலை இளவர் – சிறப்பு (B.A. - Honours) பட்டம் பெற்றார். அப்பொழுது புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான சரவண ஆறுமுகன், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார்.
பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் சிலப்பதிகாரச் சொல் வளம் என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின்வழிகாட்டுதலில்1954 முதல் 1956 ஆம் ஆண்டு வரை ஆய்வுசெய்து இலக்கிய முதுவர் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, 1956 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில், அரசின் உதவி பெற்று, தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார். ஆனால் 1973ஆம் ஆண்டிலேயே முனைவர் பட்டம் பெற்றார்.


ஆசிரியப் பணி:

கனகசவுந்தரி தனது கல்லூரிக் கல்வியை முடித்ததும் திருச்சியில் உள்ள தூய சிலுவை மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்கு 1954 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்தது. ஆனால் அடுத்த மாதமே அவருக்குத் திருமணம் நடைபெற இருந்ததால் முதல் நாளிலேயே அவ்வேலையை இழந்தார்.
1959 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் புதுதில்லியின் மந்திர் மார்க்கில் மதராசி கல்விக் கழகம் நடத்திய உயர்நிலைப் பள்ளியில் கிடைத்த தமிழாசிரியர் பதவி அரசியல் செல்வாக்கு உடைய ஒருவரின் தலையீட்டால் கைநழுவிப் போனது.
பின்னர் 1959 செப்டம்பர் மாதம் தொடங்கி 1961 ஏப்ரல் மாதம் வரை தில்லி தயாள்சிங் மாலைக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1961 ஆகத்து 30 ஆம் நாள் முதல் திருப்பதி தேவதானம் புதுதில்லியில் நடத்தும் திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றிப் பேருரையாளர், பேராசிரியர், முதல்வர் என உயர்ந்து 1982 ஆம் ஆண்டு நவம்பர் முதல்நாள் விருப்ப ஓய்வுபெற்றார்.


எழுத்துப்பணி:

புனைபெயர்
கனகசவுந்தரி, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்றபொழுது அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை மதுரை தியாகராசர் கல்லூரி நடத்தியது. அப்போட்டியில் கலந்துகொள்வோர் தம்முடைய கட்டுரைகளைப் புனைப்பெயரிலேயே சமர்பிக்க வேண்டும் என்னும் விதி இருந்தது. ஆதலால், இப்போட்டியில் கலந்துகொண்ட கனகசவுந்தரி, சாலினி என்னும் சிலப்பதிகார கதைமாதின் பெயரைத் தனது புனைப்பெயராகச் சூட்டி தனது கட்டுரையைச் சமர்பித்தார். பின்னாளில் அவர் கணவர் மகாலிங்கம், தனக்கு சாலை இளந்திரையன் எனப் புனைப்பெயர் சூட்டிக்கொண்டபொழுது, கனகசவுந்தரி, தனக்கு சாலினி இளந்திரையன் எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டார்.
இவருடைய படைப்புகள் திருமணத்திற்கு முன்னர் கனகசவுந்தரி என்னும் பெயரிலும் திருமணத்திற்குப் பின்னர் கனகசவுந்தரி இளந்திரையன் என்னும் பெயரிலும் புனைப்பெயர் சூட்டிக்கொண்ட பின்னர் சாலினி இளந்திரையன் என்னும் பெயரிலும் வெளிவந்தன.
படைப்புகள்
சென்னை மாநிலக் கல்லூரியில் 1952ஆம் ஆண்டில் கலை இளவர் பட்டப் படிப்பிற்கான முதலாண்டு மாணவராகப் பயின்றபொழுது மணிமேகலைக் காப்பியத்தை ஆய்வுசெய்து வாடாமலர் என்னும் கட்டுரையை எழுதிப் படித்தார். இதுவே இவரது முதற்கட்டுரையாகும். இக்கட்டுரை அவ்வாண்டின் சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது. இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி என்னும் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எழுதினார்.

இதழாசிரியப் பணி:

சாலினி இளந்திரையன் அரசியற் செயற்பாட்டளாராக இருந்த பொழுது அவரது கருத்துகளை வெளியிடுவதற்காக 1987 ஆம் ஆண்டில் மனித வீறு என்னும் இதழை வெளியிட்டார். இது இதழ்கள் 12 வெளியீடுகளோடு நின்றுவிட்டது. பின்னர் அறிவியக்கப் பேரவையின் கொள்கையான வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழுக்கு 1992, 1993 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார்.

சொற்பொழிவுப் பணி:

விருதுநகரில் வாழ்ந்தபொழுது அங்கிருந்த காரைக்கால் அம்மையார் சங்கம், சமரச சன்மார்க்க சங்கம், விருதைத் தமிழ்க் கழகம் ஆகியனவற்றில் நடைபெற்ற சமய, இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்டுச் சொற்பொழிவுக்கலையைக் கற்றார்.
சிலவேளையில் அச்சங்கங்களில் சிற்சில சொற்பொழிவுகளை ஆற்றும் வாய்ப்பினையும் பெற்றார். பின்னர் கல்லூரிக் கல்விக் காலத்தில் தன்னுடைய சொற்பொழிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.
1961ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் அழைப்பிற்கிணங்க அந்நாடுகளில் தன் கணவர் சாலை இளந்திரையனுடன் இணைந்து சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். இதுபோலவே இலங்கைக்கும் சொற்பொழிவுப்பயணம் செய்தார். ஆண்டுதோறும் தில்லியிலிருத்து தமிழகத்திற்கு கோடைவிடுமுறையில் வரும்பொழுதெல்லாம் தன் நண்பர்கள் துணையோடு தமிழகத்தின் பலபகுதிகளில் சொற்பொழிவாற்றினார். ஓய்வுபெற்று சென்னைக்கு வந்த பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ம. பொ. சி. நினைவு அறக்கட்டளை சொற்பொழிவாற்றினார்.
அதுவே சங்கத்தமிழரின் மனிதநேய மணிநெறிகள் என்னும் நூலாக வெளிவந்தது.

அரசியற் செயற்பாட்டுப் பணி:

திராவிடத் தந்தை ஈ. வெ. இராமசாமி பெரியாரைத் தன் அரசியல் சமூகச் சிந்தனைக்கு வழிகாட்டியாகச் சாலினி இளந்திரையன் கொண்டிருந்தார். எனவே அவரை அடியொற்றி தனது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதற்காகத் தன் துணைவருடன் இணைந்து அறிவியக்கப் பேரவையைத் தொடங்கினார். அப்பேரவையின் வழியாகப் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டார்.
1985ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்று சென்னை திரும்பிய பின்னர் பொதுவுடைமைத் தமிழ்தேசியக் கருத்துகளை முன்வைத்துக் களப்பணி ஆற்றினார். அறிவியக்கப் பேரவையும் பிற தமிழ்தேசிய இயக்கங்களும் இணைந்து தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாடு ஒன்று சென்னையில் நடத்த உள்ளதாக அறிவித்தனர். அம்மாநாட்டிற்கு அரசால் தடைவிதிக்கப்பட்டது. தடையை மீறி மாநாட்டை நடத்தியதற்காகச் சாலினி இளந்திரையன் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறைசென்றனர். இவ்வாறு தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் சாலினி இளந்திரையன் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில், மனிதச் சங்கிலிப் போராட்டங்களில், மாநாடுகளில் பங்கேற்று அரசியற் செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.

மறைவு:

சென்னை தலைநகர் தமிழ்ச்சங்கமும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து தில்லியில் தமிழை செம்மொழியாகவும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாகவும் அறிவிக்கக்கோரி 2000 ஏப்ரல் 30 ஆம் நாள் மாநாடு ஒன்றை நடத்தினர். அம்மாநாட்டின் பேராளர்களை வரவேற்பதற்காகச் சென்றபொழுது ஏற்பட்ட சாலை நேர்ச்சியில் 29.4.2000 ஆம் நாள் சாலினி இளந்திரையன் மரணம் அடைந்தார்.