சிலம்பொலி சு. செல்லப்பன்

சிலம்பொலி சு. செல்லப்பன்

bookmark

வாழ்க்கைக் குறிப்பு:

சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்பி தமிழுக்குப் பெருமை சேர்த்த சிலம்பொலி செல்லப்பன், நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தில் 1928-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி பிறந்தார். கணித ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழிலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால், தமிழிலும் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் 1953-ஆம் ஆண்டு ‘சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பில் சு. செல்லப்பன் ஆற்றிய உரையைக் கேட்ட ‘சொல்லின் செல்வர்’ரா.பி. சேதுப்பிள்ளை, ‘சிலம்பொலி’ என்னும் சிறப்புப் பெயரை அவருக்குச் சூட்டினார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிலப்பதிகாரத்தை பரப்பியவர் சிலம்பொலி சு.செல்லப்பன். சிலப்பதிகாரம் பற்றி முழுமையாக ஆய்வுசெய்து ‘சிலம்பொலி’என்னும் தலைப்பில் 1975-இல் ஆய்வு நூலை வெளியிட்டார்.

பணிகளும் பொறுப்புகளும்:


 


 


 

  • கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். மேலும்,

  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர்,

  • தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர்,

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்,

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

  • இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர்,

  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பரிந்துரைக்கும் குழுவின் தலைவர் 1999

  • போன்ற பணிகளில் இருந்தபோது தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். செம்மொழி எண்பேராயக் குழுவில் சீர்மிகு உறுப்பினராய்ச் சிறப்பாகப் பணியாற்றினார்.

    உலகத் தமிழ் மாநாடுகளில் பங்களிப்பு:

    சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகிய மூன்று மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாக அப் பணியைச் செய்து முடித்தவர் சிலம்பொலி செல்லப்பன். தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்களில் ஒருவராக விளங்கினார்.

    எழுத்தாளர்:

    சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் உட்படப் பல நூல்களை எழுதியிருக்கிறார். எழுதிய நூல்கள் பின்வருமாறு:

  • சிலம்பொலி (1975)

  • சங்க இலக்கியத் தேன் (மூன்று தொகுதிகள், 1996)

  • நல்ல குறுந்தொகையில் நானிலம், 1959

  • மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நாண்மணிக்கடிகை தெளிவுரை), 1980

  • இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் (மூலமும் தெளிவுரையும்), 1994

  • மணிமேகலை (மூலமும் தெளிவுரையும்), 1998

  • நாலடியார் (மூலமும் தெளிவுரையும்), 2000

  • மலர் நீட்டம் (திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்), 2003

  • சிலப்பதிகாரச் சிந்தனைகள், 2011

  • கணிதச் செல்வம் (எட்டு நூல்கள்), 1964-1966

  • பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர், 1983

  • வளரும் தமிழ், 1987

  • காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், 1989

  • நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), 2004

  • இலக்கியச் சிந்தனைகள், 2004

  • பெருங்கதை ஆராய்ச்சி, 2006

  • இக்காலத் தமிழ்க் காப்பியங்கள், 2004

  • இலக்கியம் ஒரு பூக்காடு, 2004

  • பூங்காவில் புதுமணம், 2009

  • இசுலாமிய இலக்கியச் சாரல், 2011

  • நான் ஒரு தும்பி, 2004

  • திருக்குறள் இன்பத்துப்பால் (மூலமும் உரையும்), 2015

  • பெருங்குணத்துக் கண்ணகி, 2008

  • செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம்:14 தொகுதிகள், 2016

  • சிலம்பொலியார் பார்வையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், 2008

  • பட்டங்களும் விருதுகளும்:

  • சிலம்பொலி பட்டம் (1954 இல் இரா. பி. சேதுப்பிள்ளை வழங்கியது)

  • பாவேந்தர் பாரதிதாசன் விருது

  • சிலம்பொலியாரின் அணிந்துரைகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

  • கம்பன் புகழ் விருது, 2013 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை

  • இறப்பு:

    முதுபெரும் தமிழறிஞரும், சிலப்பதிகாரத்தை மக்களிடமும் கொண்டு செல்வதற்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவருமான முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக ஏப்ரல் 06-04-2019 காலமானார்.