தாமரைக்கண்ணன்

bookmark

வாழ்க்கைச் சுருக்கம்:

தாமரைக்கண்ணன் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சென்னையிலும் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். 1980 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) தேர்வும், 1990 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெற்றார். மேலும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

ஆசிரியர் பணி:

அவர் 06.09.1954இல் செங்கல்பட்டு மாவட்டம் பொன்னேரி மாவட்டக் கழகக் கலப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்தார் . அங்கு பணியாற்றியபோது, அவருடைய பேச்சாற்றலும் வடிவமைந்து வெளிப்பட்டன. சென்னையிலிருந்து வெளிவந்த ‘செளபாக்கியவதி’ அரசு இதழில் முதன்முதலாக ‘மங்கையர்க்கரசிக்கு’ எனும் கட்டுரையும், ‘தமிழன் புரட்சி’ என்ற இதழில் ‘செவ்வாய்க்கிழமை’ என்ற சிறுகதையும் அச்சில் வெளிவந்தன. ஓரங்க நாடகங்களும்,முழு நேரப் பெரிய நாடகங்களும் ‘ஆரம்பக் கல்வி’ என்னும் மாத இதழில் தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுகள் எழுதினார். ‘ஆரம்பக்கல்வி’யால், தி.மு.க.வின் பெருந்தலைவர்களுள் ஒருவரான திரு.காஞ்சி மணிமொழியாரின் திருமகனார் கட்டுரைச் செல்வர் பேராசிரியர் மா.இளஞ்செழியனார் அவர்களின் நட்பும், அன்பும், அரவணைப்பும் அவருக்கு கிடைத்தன. 20.01.1957இல் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தைச் சார்ந்த கொங்கரை மாம்பட்டு என்னும் கிராமத்தில் பணியாற்றிய காலத்தில் ஆரம்பக் கல்வி, பிரசண்ட விகடன், ஆனந்தவிகடன், குமுதம், போர்வாள், காதல், காஞ்சி, அமுதசுரபி, உமா, உலகம், தினத்தந்தி, மாலை முரசு முதலான இதழ்களிலும், சென்னை வானொலியிலும் ஏராளமான சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதினார். ஆசிரியராகப்பணியாற்றிய காலத்தில் (1960 இல்) எஸ்.எஸ்.எல்.சி யும், 1961 இல் இடைநிலை ஆசிரியர் தேர்வும் எழுதித் தேர்ச்சியுறர் . படிப்படியாகப் புகுமுகத் தேர்வு, இடை நிலைத் தேர்வு, இறுதிநிலைத் தேர்வு ஆகியவற்றை எழுதி 1965 இல் புலவர் ஆனார் . 20.07.1965 இல் மதுராந்தகம் வட்டம், ஒரத்தி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகச் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று 04.07.1966 முதல் 03.01.1967 வரை மதுராந்தகம் வட்டம், கூவத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் முதல் நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியப் பொதுப் பணிகள்:

‘சங்கப் பலகை’ என்னும் இலக்கியச் சுழல் அமைப்பை நிறுவி எழுத்தாளர்களுக்குப் பாராட்டும் பட்டங்களும் வழங்கி உள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் ,அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செங்கை அண்ணா மாவட்டத்தின் கிளைத்தலைவராகவும் பணியாற்றினார்.

அவரின் எழுத்துப் பணி:

தமிழக நாள், வார, திங்கள் இதழ்களிலும், சென்னை, புதுவை, திருச்சி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், முந்நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்கள், நடித்து, இயக்கியவை முப்பது நாடகங்கள், தினமணி சுடர், தினமலர், அமுதசுரபி, தேவி ஆகிய இதழ்களில் கல்வெட்டு ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் ஐந்நூறு நூல்களுக்கு மேல் எழுதப்பெற்ற மதிப்புரைகளை எழுதினார்.

விருதுகளும், பட்டங்களும்:

  • சங்கமித்திரை -நாடகம் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1982

  • வரலாற்றுக் கருவூலம் - தொல்பொருளியல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1984 (இரண்டாம் பரிசு)

  • பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய ‘இரகசியம்’நாடகத்திற்கான முதல் பரிசு (1993)

  • தமிழக அரசு வழங்கிய மாநில நல்லாசிரியர் விருது (1988)

  • பல்கலைச் செம்மல் - சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1985)

  • டாக்டர் பட்டம் - நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் (1985)

  • திருக்குறள் நெறித் தோன்றல் - தமிழக அரசு (1985)

  • நாடக மாமணி - திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை (1985) பாரதி தமிழ்ப்பணிச் செல்வர் - ஸ்ரீராம் நிறுவனம் (1990)

  • இலக்கியச் சித்தர் - பண்ருட்டி எழுத்தாளர் சங்கம் (1995)

  • இலக்கியச் சிற்பி - புதுவை (1996)