வரைக்காட்சிப் படலம் - 932

bookmark

932.

குப்புறற்கு அருமையான
   குல வரைச் சாரல் வைகி.
ஒப்புறத் துளங்குகின்ற
   உடுபதி ஆடியின்கண்.
இப் புறத்தேயும் காண்பார்.
   குறத்தியர். இயைந்த கோலம்;
அப் புறத்தேயும் காண்பார்.
   அரம்பையர். அழகு மாதோ!
 
(ஓங்கியுள்ள     அந்த  மலை)  குப்புறற்கு  - கடந்து செல்வதற்கு
முடியாததால்;அக்  குல  வரைச்  சாரல்  வைகி  -  ஓங்கிய  அம்
மலையின் சாரலிடத்தில் தங்கி; ஒப்புறத் துளங்குகின்ற - (இரு புறமும்)
ஒரே   தன்மைத்தாக   விளங்குகின்ற;   உடுபதி   ஆடியின்கண்  -
சந்திரனாகிய  கண்ணாடியிலே;  குறத்தியர்  இயைந்த - மலை மகளிர்
தன்   மனத்திற்கு   ஏற்றவாறு  அணிந்த;  கோலம்  இப்புறத்தும்  -
கோலங்களை   (நிலவுலகமான)    இந்தப்   பக்கத்திலும்;  காண்பார்-
காண்பார்கள்;  அரம்பையர் அழகு - வானுலகத் தெய்வ மகளிர் (தாம்
புனைந்த)  அலங்காரத்தை; அப் புறத்தும் காண்பார் - (வானுலகமான)
அந்தப் பக்கத்திலும் காண்பார்கள். 

சந்திரனை     அப்பாலே   செல்லவொட்டாமல்   ஓங்கி  இம்மலை
தடுத்துள்ளது.   அதனால   சந்திரன்   இம்    மலைச்   சாரலிலேயே
தங்கினான்.  அவ்வாறு  தங்கிய  சந்திரன் ஒரு புறம் மலைக் குறத்தியர்
தமது  கோலத்தைக்  காண்பதற்கு உதவியது.  மற்றொரு புறம்  வானுலக
மகளிர் தமது கோலத்தைக்  காண்பதற்குப்  பயன்படுவதாயிற்று  என்பது
- தொடர்புயர்வு  நவிற்சியணி.  உடுபதியாகிய கண்ணாடி (சந்திரன்) நாம்
காணும்    கண்ணாடி    போன்றதாக    அமையாமல்    இருபக்கமும்
பார்க்குமாறு   அமைந்தது   -  வேற்றுமையணி.   உடுபதி:   சந்திரன்.
சந்திரன். சாரலில் தங்கும் சயிலம் ஆதலின் சந்திர சயிலம் ஆயிற்று.  5