மிதிலைக் காட்சிப் படலம் - 617
617.
‘நெருக்கி உள் புகுந்து. அரு
நிறையும் பெண்மையும்
உருக்கி. என் உயிரொடு
உண்டு போனவள்
பொருப்பு உறழ் தோள்
புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன்
காமன் அல்லனே!
நெருக்கி உள்புகுந்து- (என் மனத்துள்ளே) நெருக்கிப் புகுந்து;
அருநிறையும் - அழிக்க முடியாத என் மன உறுதியையும்;
பெண்மையும் - (நாணம் முதலிய பிற) பெண்மைக் குணங்களையும்;
உருக்கி - இளகச் செய்து; என் உயிரொடும் - (அவற்றை) எனது
உயிருடன்; உண்டு போனவன் - கவர்ந்து சென்ற உத்தமன்.
(மன்மதனோ என்றால்); பொருப்பு உறழ்தோள் - மலைபோன்ற
தோளிலே; புணர் புண்ணியத்தது - சேர்ந்த நல்வினையுடையது;
கருப்பு வில் அன்று - கரும்பு வில் அன்று (ஆதலால்);
அவன் காமன் அல்லனே - அவன் மன்மதன் இல்லை.
இராமனது அழகிலே மயங்கிய சீதை இவன் மன்மதனோ என
ஐயுற்றாள். பின் கையில் கரும்பு வில் இல்லாமல் மூங்கில் வில்லையே
வைத்திருந்ததால் இவன் காமன் இல்லை என்று தெளிந்தாள். 54
