மிதிலைக் காட்சிப் படலம் - 618
618.
‘பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?
பெண்வழி - பெண்ணிடம் இயல்பாக உள்ள; நலனொடும் -
அழகையும்; நாணொடும் - உடன்பிறந்த நாணத்தையும்; எண்வழி
உணர்வும் - மனத்திலுள்ள அறியையும்; எங்கும் காண்கிலேன் -
(அம் மைந்தன் வந்து போனபின்) நான் காண்கிறேன் அல்லேன்;
அடி வருந்த - (ஆதலால்) தன் திருவடிகள் வருந்துமாறு; மண்வழி
நடந்து போனவன் - தரையிலே நடந்து சென்ற அந்த இளைஞன்;
கண்வழி நுழையும் - கண்களின் வழியே மனத்திற்குள்ளே
செல்லவல்ல; ஓர்கள்வனே கொல் ஆம் - ஒரு கள்வன் போலும்!
‘கண்வழி நுழையும் ஓர் கள்வன்’ - விசித்திரமான கள்ளன். அம்
மைந்தனை நான் கண்டவுடனே ‘என்னுடைய நலன். நாண். உணர்வு
என்ற இவற்றை இழந்தேன். ஆகையால். அம் மைந்தன் கண்டார்
கண்வழியே புகுந்து கரந்து செல்ல வல்லவன்’ என்கிறாள் சீதை.
எண்வழி: எண்ணுமிடத்து;எண் வழியுணர்வு- எண்ணத்தின் வழியே
செல்கின்ற அறிவு. 56
