மிதிலைக் காட்சிப் படலம் - 620
620.
‘படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்.
தடந் தரு தாமரைத் தாளுமே. அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்.
நடந்தது. கிடந்தது. என் உள்ளம் நண்ணியே.
படர்ந்து ஒளிபரந்து- அகன்ற ஒளி பரந்து; உயிர் பருகும் -
காண்போர் உயிரைப் பருகக் கூடிய ; ஆகமும் - அவனது
திருமார்பும்; தடம் தரு - பெருமை மிக்க; தாமரைத் தாளுமே
- செந்தாமரை போன்ற திருவடிகளும் என்னும்; அல - இவையே
அல்ல; கடம்தரு மாமதம் - கன்னத்திலிருந்து வழியும் மிக்க
மதநீரையும்; களி நல்யானை போல் - களிப்பையும் உடைய சிறந்த
ஆண் யானை போல; நடந்தது - (அந்த இளைஞன்) நடந்துசென்ற
நடையழகு; என் உள்ளம் நண்ணி - என் மனத்தில் பொருந்தி;
கிடந்தது - (எப்பொழுதும் நீங்காது) பதிந்துள்ளது.
சீதை இராமனது மார்பின் அழகு. தாமரைத் திருவடிகளின் அழகு
என்ற இவற்றைவிட அவனது நடையழகில் தன் மனம் பதிந்தமையைத்
தெரிவிக்கின்றாள். தடம் தரு தாமரை: தடாகத்தில் பூத்த தாமரை
என்றும் கூறலாம். பறிக்கப்பட்டு வாடிப் போகாத அன்று பூத்த மலர்
எனலாம். 58
